சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.20 மணி நிலவரம்) கலைஞர் கருணாநிதியின் நல்லுடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஸ்டாலின், கனிமொழி, அழகிரி குழுவினர் முதல்வரிடம் வைத்த கோரிக்கைகளில் ஒன்று அவர் மறைந்தால் நல்லடக்கம் செய்யப்பட மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்பதாகும்.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் துரை முருகன் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்கக் கோரிக்கை விடுத்துள்ளோம் இன்னும் எங்களுக்கு தமிழக அரசின் முடிவு தெரிவிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்த அறிக்கையில், சட்ட சிக்கல்கள் காரணமாக மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். எனினும் காமராஜர் நினைவகம் அருகே, கிண்டியில் 2 ஏக்கர் நிலத்தை கருணாநிதி நினைவிடம் அமைக்க தமிழக அரசு ஒதுக்க முன்வருவதாகவும் கிரிஜா தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசு 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை புதன்கிழதை பொது விடுமுறையாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.