வருமானவரி செலுத்துபவர்கள் கூடுதலாகச் செலுத்திய தொகையை அவர்களுக்கு திருப்பிச் செலுத்துவது நிதி அமைச்சின் வழக்கமாகும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக இவ்வாறு செலுத்தாத காரணத்தால் அந்தத் தொகை தற்போது 16.046 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்து விட்டதாகவும் குவான் எங் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆண்டு மே 31 வரை இவ்வாறு கூடுதல் வரியைத் திரும்பப் பெறாதவர்களின் எண்ணிக்கை 1,653,786 எனவும் குவான் கூறினார்.
இவ்வாறு திரும்பச் செலுத்த வேண்டிய நிதியைக் கொண்ட அறவாரியக் கணக்கில் தற்போது 1.486 பில்லியன் ரிங்கிட் மட்டுமே இருப்பதாக அரசாங்கத் தலைமை கணக்காய்வாளர் இலாகாவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றும் குவான் எங் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து திரும்பச் செலுத்த வேண்டிய வருமானவரி தொகையில் 14.56 பில்லியன் ரிங்கிட் கணக்கில் குறைந்திருப்பதாகவும் கூறிய குவான் எங் இவ்வாறு நடந்ததற்குக் காரணம் நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா முறையாக இந்த வருமான வரி வசூல்களை அறவாரியக் கணக்கில் செலுத்தாததுதான் என்றும் குற்றம் சாட்டினார்.