Home நாடு “இந்து அறப்பணி வாரியம் – மக்கள் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்” டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்

“இந்து அறப்பணி வாரியம் – மக்கள் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்” டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்

1519
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “பினாங்கு இந்து அறவாரியம் நாடு தழுவிய அளவில் மற்ற மநிலங்களுக்கும் விரிவு படுத்தப்படும்” என்றும், “இது தொடர்பாக ஒரு சட்டம் வரையப்பட்டு நாட்டின் தலைமைத்துவத்திடம் வழங்கப்படும்” என்றும் “இந்து அறவாரிய சட்டத்தை உயர்ந்த அதிகாரம் கொண்ட குழு ஒன்று பரிசீலித்து வடிவமைத்து வருகிறது” என்றும் “மாநில அளவில் இந்த அறப்பணி வாரியத்தை அமைக்க அரசியல் சட்டம் இடம் தரவில்லை என்பதால் நாடாளுமன்றத்தில் ஒரு தேசிய அளவில் இத்தகைய சட்டத்தைக் கொண்டுவர நாம் பாடுபடுகிறாம்” என்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்  தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி அண்மையில்  நாளிதழ்களில் வெளியிட்டிருந்த கருத்தினை, கட்சி வேறுபாடின்றி இந்துக்களும் இந்து சமய அமைப்புக்களும் பரிசீலிக்க முன்வரவேண்டும்” என முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர், பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், கொண்டு வந்துள்ள மாற்றங்களும், தோற்றுவித்துள்ள இந்து அருங்காட்சியகமும் பாராட்டிற்குரிய செயலாக இருப்பினும் நாடாளாவிய நிலையில் அவசர கதியில் இந்து அறப்பணி வாரியத்தை நடைமுறைப் படுத்தும் முயற்சியை இந்து சமயத்தினருடன் இணைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் குமரன் கேட்டுக்கொண்டார்.

குமரன் மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

“நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால் இந்து ஆலயங்களை ஒருங்கிணைக்கும்-மேற்பார்வையிடும் நடவடிக்கைகளை பக்காத்தான் அரசு மேற்கொள்ளும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் முன்னெடுப்பே இந்த சட்டவரைவு முயற்சியாகும். என்று நினைக்கிறேன். இது ஒரு சமுதாயத்தின் சமயப் பிரச்சினை. இதனை ஒரு கட்சியை சார்ந்தவர்கள் கூடி முடிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்து சமயத்தை தழுவி வாழும் மக்களின் கருத்தறிந்து நவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏதும் ஏற்படாது” என்றும் தான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குமரன் குறிப்பிட்டார்.

பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி

அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறியிருப்பதாவது:-

“இந்நாட்டில் உள்ள இஸ்லாமியச் சட்டங்களை ஆய்வு செய்யப் போவதாகவும் அச் சட்டங்களின் நடைமுறைகள்/அமுலாக்கம் குறித்து, இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாது இஸ்லாமியர்கள் அல்லாவர்களின் கருத்தும் அறியப்படும் என்று சுல்தான்களின் முத்திரைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கை சமய நல்லிணக்கத்திற்கு நல்ல அறிகுறியாகும்.  இக்கருத்தினை அறப்பணி வாரியம் கொண்டுவர முனைவோர் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.”

“மக்கள் விருப்பத்தை-தேவையை நிறைவு செய்வதே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின பணியாக இருக்க வேண்டுமேயொழிய தங்களது விருப்பு வெறுப்புகளை மக்களிடம் திணிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவை சமுதாயத்தில் பலவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிலிருந்து இந்நாட்டிற்கு புலம் பெயர்ந்து வந்த நமது பூட்டனும், பாட்டனும் , அன்னை மாரியம்மனையும், அருந்தமிழ் மொழியையும் தங்களுடன் சுமந்து வந்து பாதுகாத்ததால்தான் சமயமும், தமிழும், தமிழ்ப் பள்ளிகளும் இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன”

“1906ல் அன்றைய காலனித்துவ அரசு தொடுவாய் குடியேற்ற மாநிலங்களில் (ஸ்டிரேய்ட்ஸ் செட்டல்மெண்ட்) இந்து அறப்பணி வாரியத்தை அமைத்திருந்தாலும், இன்றுவரை அந்தந்த மாநிலங்களில உள்ள எல்லா ஆலயங்களும் அறப்பணி வாரியத்தின் கட்டுப்பாட்டிலோ அல்லது மேற்பார்வையிலோ இயங்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்து ,கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், தாவோ, பாகாய் போன்ற இஸ்லாம் அல்லாத மதப்பிரினர் இந்த நாட்டில் குடிமக்களாக வாழ்ந்து வருகையில், இந்து சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும், ஏன் அரசாங்க மேற்பார்வையும், விதிமுறைகளும் அதுவும் அவசரம் அவசரமாக செய்ய வேண்டிய கட்டாயம் என்ன என்பதனை ஆட்சியிலுள்ளவர்கள் மக்களுக்கு நன்முறையில் விளக்கவேண்டும்”

“இவ்வாறு உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் வெளிப்படையாக நன்மை அளிப்பது போன்று இருந்தாலும், பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின் எழக்கூடிய அதன் சாதக-பாதகமான விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றும் குமரன் எச்சரித்தார்.

“பாரிசான் ஆட்சியிலும்- பக்காத்தான் ஆட்சியிலும் பல இன-சமய- உறுப்பினர்களை கொண்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இன்றும் பொறுப்பில் இருக்கின்றனர். குறிப்பாக அமைச்சரவையில், இந்து, கிறித்துவ, சீக்கிய, புத்த, தாவோ சயங்களைச் சார்ந்தவர்கள் உறுப்பியம் பெற்றிருக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியைப் பார்க்கும்போது அடுத்துவரும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நிலைமை நிச்சயமாக மாறும். காரணம் நாளுக்கு நாள் குறைந்து வரும் சமுதாயத்திற்கு சொந்தக்காரர்களாக  இந்து சமயத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இதை யாராலும் தடுக்க முடியாது. எனவே. ஆலய சீர்திருத்தம்- அறப்பணி வாரியம் என்ற பெயரால் ஆட்சியில் உள்ளோர் கொண்டுவரவிருக்கும் மாற்றம் சம்பந்தமான கருத்துகளுடன், மக்களின் கருத்துகளயும் குறிப்பாக, ஆலயங்கள், சமய அமைப்புகள், சமய அறிஞர்கள், இந்து சமயத்தைச் சேர்ந்த முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபடவேண்டும்” என்றும் குமரன் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

“இந்தியர்கள் உறுப்பியம் பெற்றிருக்கிற எல்லா அரசியல் கட்சிகளிலும் இந்து சமயத்தைச் தழுவியவர்கள் உறுப்பியம் பெற்றிருக்கின்றனர். பாரிசான் அரசு “முஸ்லிம் அல்லாதார் திருமண சட்ட வரைவை நாடாளுமன்ற பரிசீலனைக்கு கொண்டுவருமுன் நாடு முழுதும் சென்று மக்கள் கருத்தறிந்தனர். அவ்வாறு ஈப்போவில் நடைபெற்ற கருத்தாய்வு கூட்டத்தில் பல அமைப்புகளுடன், நானும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தேன்” குமரன் சுட்டிக் காட்டினார்.

“நம் நாட்டில் சமயத் தொண்டாற்றும் பாலயோகி சாமிகள், முத்துகுமார சிவச்சாரியார், இராமாஜி, முனைவர் நாகப்பனார், தர்மலிங்கம், இன்னும் பல சமய வழிகாட்டிகள் பெரிய ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள், சமயத்துறையில் அனுபவம் பெற்ற அருளாளர்கள்.. இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், நால்வர் மன்றம், சைவ சமயப் பேரவை, சைவ நற்பணி மன்றம், சாயி பாபா அமைப்புகள், ஐய்யப்பசாமி இயக்கத்தினர் போன்று பல சமய அமைப்புகள், நீதிமன்ற ஆணையில் இயங்கும் ஆலயங்கள்,, சங்களின் ஆணைத்தில் பதிவு பெற்ற ஆலயங்கள், நகரத்தார் ஆலயங்கள், பதிவு பெறாத ஆலயங்கள், இந்து சமய ஆகம, சட்ட விதிகள் அறிந்த வழக்கறிஞர்கள் இவர்களுடைய கருத்துகளை, நேரடியாகவோ, ஊடகங்கள் வழியாகவோ இணைத்தின் வழியாகவோ, அஞ்சல் வழியாகவோ பெற முயற்சி செய்யவேண்டும். அறிஞர் பெருமக்களைக் கொண்டு அறப்பணிவாரிய சட்ட வரைவிற்கு இறுதி வடிவம் கொடுக்கும் முன் மேற்குறிப்பிட்டவர்களின், பொது சமய கருத்துக்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
முதலாவது இது போன்ற அமைப்பு இந்து ஆலயங்களுக்குத் தேவையா? தேவை என்றால் அது முஸ்லிம் அல்லாத மற்ற எல்லா சமயங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவிற்குப்பின் சட்ட வரைவு பற்றி சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் சிலவற்றை நினைவில்கொளவது நல்லது. தமிழ்ப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியராக தமிழறியாதவர்கள் நியமனமும், மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்கு இந்தியரல்லாத, ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டதும், அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளும் அவற்றிற்காக .அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் நடத்திய போராட்டங்களையும் நாம் மறந்துவிடக்கூடாது. அரசாங்க நிர்வாகம் என்ற பெயரால் அரசாங்க ஊழியர்களை எந்தப் பதவிக்கும் நியமிக்கும் உரிமையை அரசாங்கம் பெற்றுள்ளது. கால ஓட்டத்தில் இந்து சமயத்தைச் சேர்ந்த அரசாங்க அலுவலர்களின் எண்ணிக்கை குறையும்போது மற்ற சமயத்தினர் இந்து அறப்பணி வாரியத்தில் மேல்நிலை அலுவலராக பதவி பெறமாட்டார்கள் என்பதை யார் உறுதி செய்வது? இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆனாலும் பாதகமில்லை. இந்து மக்களுடைய கருத்துக்களை அறிந்து முடிவு செய்யுங்கள். மக்களுக்காக மக்களின் சமய தேவைகளை நிறைவு செய்யும் மையங்களாக ஆலயங்கள் திகழ்வதால், அரசியல்-அரசாங்க தலையீடு இன்றி இந்து ஆலயங்களை பாதுகாப்போம்” என்றும் குமரன் தனது அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார்.