Home நாடு கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்

1726
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலக அளவில் இயங்கி வரும் இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (International Society for Krishna Consciousness) மலேசியாவில் கோலாலம்பூர், ஜாலான் அவான் ஜாவா என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜகன்னாத ஆலயத்தில் நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 3) ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடுகிறது.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், தெய்வத்திரு பக்தி வேதாந்த சுவாமி  ஸ்ரீல பிரபுபாதரால்  1966ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை, இஸ்கான் 10,000 கூட்டமைப்பு பக்தர்களும், 250,000 ஆலய பக்தர்களும் உடைய இயக்கமாக இயங்கி வருகிறது.

இஸ்கோன் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதா

“ஹரே கிருஷ்ண இயக்கம்” என்று பெரும்பாலும் கூறப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், 400 கோவில்கள், 60 கிராமப்புற சமூகங்கள், 50 பள்ளிக்கூடங்கள் மற்றும் 60 உணவகங்களையும் உலகம் முழுவதிலும் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த மதச் சார்பற்ற இறை வழிபாட்டு  இயக்கத்தின் நோக்கம் யாதெனில், பகவத் கீதை மற்றும் பல வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியை அனைவருக்கும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் சமூகத்தை நல்வழிப்படுத்துவதே ஆகும். ஸ்ரீல பிரபுபாதா 1971ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தந்து, கிருஷ்ண பக்திக்கான விதைகளை இங்கு விதைத்தார். 1980 ஆம் ஆண்டு மலேசியாவில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் அதிகாரபூர்வ இயக்கமாக பதிவு செய்யப்பட்டது. இன்று மலேசியாவில், 20 பதிவு செய்யப்பட்ட இஸ்கான் கிளைகளும், 10க்கும் மேற்பட்ட பிரச்சார மையங்களும் நாடு முழுவதும் உள்ளன.

இஸ்கோன் அமைப்பின் வட்டாரச் செயலாளர் சுவாமி சிம்மேஸ்வர பிரபு

இஸ்கான் மலேசியா, தனக்கு சொந்தமாக இரண்டு பண்ணைத் திட்டங்களையும் கொண்டுள்ளது – பகாங்கிலுள்ள லஞ்சாங்கில் 200 ஏக்கர் ஆர்க்கிட் பூக்கள் விவசாயப் பண்ணையும், பகாங் ஜண்டா பாய்க் என்ற இடத்தில் 20 ஏக்கர் பால் பண்ணையும் உள்ளது. பெரும்பான்மையான பிரச்சார மையங்களை,  பகவான் கிருஷ்ணரின் சேவைக்காக, ஆலய அங்கத்தினர்களான பக்தர்களே, தங்கள் நேரத்தையும், உழைப்பையும் பிற சாதனங்களையும் தானாக தந்து நிர்வாகம் செய்கின்றனர்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மலேசியாவுக்கான நிர்வாக அமைப்புக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

தவத்திரு.ஜெயபதாக சுவாமி மற்றும் தவத்திரு. பானு சுவாமி.

இஸ்கான் மலேசியாவின் தலைவர், திரு. லோக பந்து கௌரங்கா பிரபு.

“நமது நலம் விரும்பி” – இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதா பின்னணி

1965ஆம் ஆண்டு, தனது 69ஆவது வயதில் ஸ்ரீல பிரபுபாதா, அமெரிக்கா செல்ல ஆயத்தமானார். ஒரு கப்பல் நிறுவனத்திடமிருந்து கிடைத்த இலவச பயணச் சீட்டுடன், “ஜலதூதா” என்னும் சிறிய சரக்கு கப்பலில் தனது பயணத்தை துவங்கினார். முப்பத்தி ஏழு நாட்கள் கழித்து, “ஜலதூதா” நியூ யார்க் அடைந்தபோது, ஸ்ரீல பிரபுபாதா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் தன்னது ஆன்மிக குருவையும் மட்டுமே முழுமையாக சார்ந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதாவிற்கு அப்போது அமெரிக்காவில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. எந்த ஒரு தெளிவான ஆதரவும்  இல்லை. அவரிடம் இருந்ததெல்லாம், ஒரே ஒரு கை நிறைந்த உடைமைகளும், எதிரொலித்து கொண்டே இருக்கும் அவரது ஆன்மீக குருவின் கட்டளைகளும் மட்டுமே.

அவருடைய வாழ்வின் இறுதி 12 ஆண்டுகளும், தன்னுடைய முதுமையைப் பொருட்படுத்தாமல், ஸ்ரீல பிரபுபாதா, பிரச்சாரம் செய்வதற்காக, இந்த உலகத்தை பதினான்கு முறை சுற்றி, ஆறு கண்டங்களுக்கு பயணம் செய்தார். இத்தனை பயணங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கிடையே  ஸ்ரீல பிரபுபாதா சுறுசுறுப்பாக தன்னுடைய எழுத்து வேலையையும் செய்தார். அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் வேத தத்துவம், மதம், சமயம், இலக்கியம், கலாச்சாரம் போன்றவற்றின் அதிகாரபூர்வமான நூலகமாகும். ஸ்ரீல பிரபுபாதா தன்னுடைய புத்தகங்களின் மூலம் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஸ்ரீல பிரபுபாதா மிக சரியான தோற்றம் உடையவர்; பூரணமான வாழ்வை வாழ்ந்தவர்; எவ்வாறு இந்த உடலை விட்டு செல்ல வேண்டும் என்று தனது இறப்பின் மூலம் முழுமையாக நமக்கு கற்று தந்தவர். ஸ்ரீல பிரபுபாதருடைய பிறந்த நாள், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு சிறப்பான நாளாகும், ஏனெனில் பக்தர்கள் அனைவரும் உற்சாகமாக தமது நித்திய ரக்ஷகரை புகழ்ந்து பேசுவர். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மலேசியாவின் இஸ்கான், ஸ்ரீ ஜெகன்னாத் மந்திர், கோலாலம்பூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

நிகழ்ச்சிகள்

ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் 4 செப்டம்பர் நிகழ்ச்சிகள்

செப்டம்பர் 3-ஆம் தேதி நிகழ்ச்சிகள்

மாலை 6.00 மணிக்கு துளசி ஆரத்தியுடன் தொடங்கும் நிகழ்ச்சிகளில் ஸ்ரீல பிரபுபாதாவின் குருபூஜை, ஜகன்னாத் மந்திர் ஆலயத் தலைவரின்  உரை, இஸ்கோன் அமைப்பின் வட்டாரச் செயலாளர் சுவாமி சிம்மேஸ்வர பிரபு அவர்களின் வரவேற்புரை, பிரமுகர்கள் உரை, கலாச்சாரப் படைப்புகள், ஊர்வலம், அன்னதானம் ஆகிய அங்கங்கள் இடம்பெறும்.

செப்டம்பர் 4-ஆம் தேதி நிகழ்ச்சிகள்

செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 4-ஆம் தேதி காலை 8.00 மணிக்கே தொடங்கும் முதல் கட்ட நிகழ்ச்சிகளில் ஸ்ரீல பிரபுபாதா குறித்த சிறப்புரை அதைத் தொடர்ந்து வியாச பூஜை அஞ்சலி, ஸ்ரீல பிரபுபாத அபிஷேகம், மலரஞ்சலி, ஆரத்தி, ஆகிய அங்கங்கள் இடம் பெறும். தொடர்ந்து பிற்பகல் 1.00 மணியளவில் பிரசாதம் வழங்கப்படும்.

கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து பயன்பெறுமாறு பக்தர்களை இஸ்கோன் அமைப்பு அன்புடன் அழைக்கிறது:

Sri Jagannatha Mandir Kuala Lumpur

International Society for Krishna Consciousness

Lot: 9901, Jalan Awan Jawa, Taman Yarl, 58200 Kuala Lumpur

Tel: +603-79807355 / +60379719817