Home One Line P1 இஸ்கோன் இயக்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டம் – மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்

இஸ்கோன் இயக்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டம் – மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்

1074
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தலைநகரில் இயங்கி வரும் இஸ்கோன் எனப்படும்  அனைத்துலக கிருஷ்ணா விழிப்புணர்வு இயக்கம் (ISKON-International Society for Krsna Consciousness, Malaysia) விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 1-ஆம் தேதி மெய்நிகர் (virtual Deepavali gathering) தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தியது.

அனைத்துலக அளவில் மலேசியா, இந்தியா, வங்காளதேசம், பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தக் கொண்டாட்டத்தில் 6,538 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இஸ்கோன் மலேசியா வட்டார இணை-செயலாளர் சுவாமி சிம்மேஸ்வர பிரபு உரையாற்றுகிறார்

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மிக அதிகமானோர் இணையம் வழி கலந்து கொண்ட மெய்நிகர் நிகழ்ச்சியாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysian Book of Records) இடம் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் இந்த சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த தீபாவளி நிகழ்ச்சியில் 1,360 பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக, நவம்பர் 1 கிருஷ்ணா விழிப்புணர்வு மையம் நடத்திய நிகழ்ச்சியில் 6,538 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தெய்வத்திரு ஜெயபதக சுவாமிகள் கலந்து கொண்டார். இவர் இஸ்கோன் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமையகம் அமைந்திருக்கும் இந்தியாவின் மேற்கு வங்காள நகரான மாயாபூரிலிருந்து நிகழ்ச்சியில் நேரலையாகப் பங்கு கொண்டார்.

ஜெயபதக சுவாமிகள் இஸ்கோன் இயக்கத்தின் நிர்வாக ஆணையத்தின் மூத்த உறுப்பினராவார். இஸ்கோன் இயக்கத்தைத் தோற்றுவித்த தெய்வத்திரு ஶ்ரீல ஏ.சி.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதாவின் நேரடி சிஷ்யர்களில் ஜெயபதக சுவாமிகள் ஒருவராவார்.

1965-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கோன் இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

உலக அமைதிக்காகவும், மனிதர்களுக்கிடையே அன்பை விதைக்கவும், கொவிட்-19 பாதிப்புகளிலிருந்து உலகமும், மக்களும் சீக்கிரமே மீள்வதற்காகவும் உலக மக்களை ஒன்றிணைக்க, மேற்கண்ட மெய்நிகர் தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இறைவன் கிருஷ்ணரை பக்தியுடன் வேண்டி விளக்கேற்றி சமர்ப்பணம் செய்தனர்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒருமாத கால தாமோதர திருவிழாவின் (Vedic Karthik or Damodara festival) தொடக்க நிகழ்ச்சியாக இந்த தீபாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. ஶ்ரீ கிருஷ்ண கடவுளின் பக்திமயமான வாழ்க்கைச் சம்பவங்களை நினைவு கூர்ந்து கொண்டாடுவது தாமோதர திருவிழாவின் நோக்கமாகும். குறிப்பாக, வேதங்களில் குறிப்பிட்டுள்ள, ஶ்ரீ கிருஷ்ணரின் தாய்ப் பாசத்தை எடுத்துக் காட்டும் சம்பவங்களை நினைவு கூர்வது இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

ஒவ்வோர் ஆண்டும் இந்த காலகட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் மலேசிய இஸ்கோன் இயக்கம் பள்ளிகளிலும் பல கல்வி நிலையங்களிலும் இலவச நூல்கள் வழங்குவது, உணவுகள் விநியோகிப்பது, அன்பளிப்புகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். சமூகத்தின் ஆன்மீக, மனநல, உடல்நல நோக்கங்களுக்காக இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டில் இஸ்கோன் மலேசியா இயக்கம் 87,488 உணவுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்தது. மேலும் 10,303 நூல்களையும் இலவசமாக வழங்கியது. நாடு தழுவிய நிலையில் பள்ளிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலமாக 228,770 தீபவிளக்குகள் ஶ்ரீ கிருஷ்ண கடவுளுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டன.

அந்த நிகழ்ச்சி தொடர்பான சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: