Home One Line P2 கமல்ஹாசன் புதிய படம் “விக்ரம்” – முன்னோட்டக் காணொலி வெளியீடு

கமல்ஹாசன் புதிய படம் “விக்ரம்” – முன்னோட்டக் காணொலி வெளியீடு

1061
0
SHARE
Ad

சென்னை : நடிகர் கமல்ஹாசன் தனது 66-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு “விக்ரம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் புதிய படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.

கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்” என்ற ஒரு படம் ஏற்கனவே அவரது சொந்த தயாரிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. எழுத்தாளர் சுஜாதாவின் கதையோடு, அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா போன்ற பிரபல இந்தி நட்சத்திரங்களுடன் பெரும் பொருட் செலவில் தயாரான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை அப்போது பெறவில்லை.

#TamilSchoolmychoice

இப்போது, அதே தலைப்பு கமலின் 232-வது படத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

அனிருத் “விக்ரம்” படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “கைதி” படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” உருவாவதால் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்த “மாஸ்டர்” படம் முடிவடைந்து வெளியாவதற்கு தயாராக இருக்கிறது. கொவிட்-19 பாதிப்புகள் தணிந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு “மாஸ்டர்” வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் நடிப்பில் வெளியாகவிருக்கும் “விக்ரம்” படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: