(நவீனத் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் சுஜாதா.அவரது பன்முகத் தன்மை இதுவரை எந்த எழுத்தாளரும் தொட முடியாத உயரம். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை, திரைப்படங்களுக்கான கதை, வசனம், பத்திரிகைகளில் கேள்வி-பதில், ஒரே நேரத்தில் பல வார இதழ்களில் தொடர் நாவல்கள் எழுதுவது என்பது அவரது ஒரு கோணத்திலான பன்முகத் தன்மை என்றால், இன்னொரு கோணத்தில் தனது படைப்புகளுக்குள் அறிவியல், நவீனத் தொழில் நுட்ப அம்சங்களைப் புகுத்தியதும், புரிந்து கொள்ள முடியாத அறிவியல் நுட்பங்களை எளிமையாக்கி வாசகனுக்குக் கடத்தியதும் அவரது இன்னொரு கோணத்திலான பன்முகத் தன்மை. ஓர் எழுத்தாளனின் தொடர் நாவலுக்கு சினிமா பாணியில் சென்னையின் மையத் தெருவில் பிரம்மாண்டமான பதாகை வைக்கப்பட்டது அவருக்குத்தான். மலேசியாவிற்கும் வருகை தந்து பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு, வாசகர்களோடு கலந்துரையாடல் நடத்தியவர். பிப்ரவரி 27 சுஜாதாவின் நினைவு நாள். அதனை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)
தொழில்நுட்பவாதியா, அறிவியல்வாதியா, இலக்கியவாதியா என்று வரையறை செய்ய முடியாத அளவிற்கு தான் வடித்த தமிழிலக்கியப் படைப்புகளில் சமூகக் கூறுகளைவிட அறிவியல் சிந்தனையையும் தொழில்நுட்ப வடிவத்தையும் இழையோட விட்ட புத்திலக்கிய படைப்பாளர் சுஜாதா.
கவிதைகள், கட்டுரைகள், அறிவியல் நூல்கள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்பட கதை-வசனம், சிறுவர் இலக்கியம் என்றெல்லாம் பல வடிவங்களில் புதுமை இலக்கியம் படைத்த எழுத்தாளர் சுஜாதா அடிப்படையில் ஒரு பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையம் பரவலாகப் பயன்படுத்தும் மின்னியல் வாக்குப்பதிவு இயந்திர உருவாக்கத்தில் சுஜாதாவின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அரசாங்கப் பணியாளர்கள், தங்களின் பணிச் சூழலிலேயே மூழ்கிவிடுவார்கள். ஆனால், மத்திய அரசாங்கத்தின் துணை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் பணியாளராக விளங்கிய சுஜாதாவோ சளைக்காமல் எழுதிக் குவித்தார். விண்வெளியில் நிகழும் அற்புதங்களை கற்பனையுடன் கலந்து தான் இயற்றிய அத்துனை இலக்கியப் படைப்புகளின்வழியும் புதிய சமுதாயத்தை சிந்திக்கவைத்த படைப்பாளர் சுஜாதா.
ஒரே சமயத்தில் ஐந்தாறு தொடர்களை எழுதி பருவ இதழ் வாசகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளர் இவர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் பிறந்த இவர், சென்னைவாசியாகி, பணிநிமித்தமாக புதுடில்லியிலேயே காலம் கழித்த சுஜாதா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ‘நினைவில் வாழும்’ மேதகு அப்துல் கலாமுடன் ஒன்றாக கல்லூரிக் காலத்தைக் கழித்தவர்.
குமுதம் வார இதழில் வெளியான ஒரு சிறுகதையின் ஆசிரியரின் பெயரும் அந்த இதழின் பொறுப்பாளரின் பெயரும் ரங்கராஜன் என்று இருந்ததால் வாசகர் மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த எழுத்தாளர், இக்குழப்பத்தை நீக்கும் விதமாக தன் மனைவியின் பெயரான சுஜாதாவை தன் புனைப்பெயராக மாற்றிக் கொண்டார்.
அதிலிருந்து சுமார் 46 வருடங்களாக சுஜாதா என்னும் பெயரிலேயே தமிழிலக்கிய படைப்பு வட்டத்தில் அறியப்பட்டவர் எஸ்.ரங்கராஜன்.
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனையை வெளிப்படுத்தும் கருத்துகள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளன. செவ்வாய் என்னும் பெருங் கோளத்தின் பெயரே, அது செந்நிறமாக இருப்பதால்தான். அந்தக் கோள், செந்நிறம் கொண்டது என்பதை அறிவியல் உலகம் அண்மையில்தான் கண்டறிந்தது. ஆனால், தமிழிலக்கியம் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே அதைக் கண்டறிந்தது விந்தைதான்.
கவியரசு கண்ணதாசன் புனைந்த ஒரு பாடல், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்; பகலுக்கு ஒன்றே ஒன்று’ என்று தொடங்கும். இப்படி ஏராளமான இடங்களில் கவிப்பெருமக்களும் இலக்கிய வாணர்களும் தங்களின் படைப்புகளில் அறிவியல் கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், சுஜாதா 1960-களில் தொடங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் தான் இயற்றிய படைப்புகளில் அறிவியல் வெளிப்பாட்டை மிகவும் தூக்கலாக வெளிப்படுத்தி உள்ளார்.
சுஜாதாவின் படைப்புகளில் ஆங்கில, சமஸ்கிருத சொற்கள் மிகையாக இடம் பெற்றிருக்கும் என்பதும் பொதுவாகக் கூறப்படும் கருத்தாகும்.
தொடக்கத்தில் சாதுவாகவும் பின்னர் துணிச்சல்காரராகவும் விளங்கிய சுஜாதா, பிற்காலத்தில் இரண்டும் கலந்தவராக பக்குவப்பட்டிருந்தார். பல்லாயிரக் கணக்கான வாசகர்களை தன்னுடைய முனை மழுங்கா பேனாவின் துணையுடன் வசப்படுத்தி இருந்த சுஜாதாவின் பங்களிப்பும் அவரின் பெயரும் நீண்ட காலத்திற்கு தமிழ் இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்.
1935-இல் பிறந்த சுஜாதாவிற்கு பிப்ரவரி 27-ஆம் நாள் (2008-இல் காலமானார்) நினைவு நாள்.