சென்னை: இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரை இழந்தது முழு தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் பிப்ரவரி 19-ஆம் தேதியன்று நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, இந்த சம்பவம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் இது குறித்து அவர் பதிவிட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பளூதூக்கி தம்மீது விழுந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“மிகவும் வருத்தத்துடன் நான் இந்த பதிவை இடுகிறேன். சோகமான சம்பவம் என்பதால், நான் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தேன். எனது துணை இயக்குனர் மற்றும் படக்குழுவினரின் இழப்பில் தூக்கமில்லாத இரவுகளைக் கடந்து வருகிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும் பிரார்த்தனையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஒரு சண்டை காட்சியை படமாக்கும்போது இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பளூதூக்கி விழுந்ததில், துரதிர்ஷ்டவசமாக, கிருஷ்ணா (உதவி இயக்குனர்), மது (கலை உதவியாளர்) மற்றும் சந்திரன் (தயாரிப்பு உதவியாளர்) ஆகியோர் உயிர் இழந்தனர்.