Home வணிகம்/தொழில் நுட்பம் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் சொத்துகள் விற்பனை

நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் சொத்துகள் விற்பனை

1186
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் மிகப் பழமையான பத்திரிக்கைகளில் ஒன்று நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழ். இதனை நடத்துவது மீடியா பிரிமா (Media Prima) என்ற நிறுவனம். நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தவிர்த்து, பெரித்தா ஹரியான் என்ற மலாய் நாளிதழ் மற்றும் சில பத்திரிக்கைகளையும் அந்நிறுவனம் நடத்துகிறது. மேலும் டிவி3 என்ற நமது நாட்டின் முதல் தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளரும் மீடியா பிரிமாதான்.

அம்னோவின் ஆதரவிலும், முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆதரவிலும் இயங்கி வந்த இந்த நிறுவனம் தற்போது தனது நிதி நிலைமையை சீர்ப்படுத்தும் நோக்கில் பங்சார் வளாகத்தில் உள்ள பாலாய் பெரித்தா (Balai Berita) என்ற கட்டட வளாகத்தையும், அந்தக் கட்டடம் அமைந்திருக்கும் நிலத்தையும் விற்பனை செய்யவிருக்கிறது.

மேலும், அதன் அச்சகம் அமைந்திருக்கும் ஷா ஆலாம் வளாக நிலத்தையும் சேர்த்து அத்தனை சொத்துகளையும் 280 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனை செய்கிறது மீடியா பிரிமா.

#TamilSchoolmychoice

பிஎன்பி டெவலப்மெண்ட் சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் இந்த சொத்துகளை மீடியா பிரிமா நிறுவனத்திடம் இருந்து வாங்கவிருக்கிறது.

எனினும், மீடியா பிரிமாவின் பத்திரிக்கைத் தொழில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் இந்த சொத்துகளை விற்ற பின்னர், இந்த சொத்துகளின் புதிய உரிமையாளரான பிஎன்பி டெவலப்மெண்ட் நிறுவனத்திடமிருந்து இந்த சொத்துகளை மீடியா பிரிமா வாடகைக்கு எடுத்து தொடர்ந்து இயங்கி வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் உத்தேசமாக 127.7 மில்லியன் ரிங்கிட் இலாபத்தை மீடியா பிரிமா நிறுவனம் அடையும்.

ஜூன் 2017 முடிந்த நிதியாண்டில் 132.9 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தைச் சந்தித்த மீடியா பிரிமா, ஜூன் 2018 முடிந்த நிதியாண்டில், 342.4 மில்லியன் ரிங்கிட் வருமானத்தையும் அதன் மூலம் 32 மில்லியன் ரிங்கிட் இலாபத்தையும் ஈட்டியது.