Home இந்தியா மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டியில் தங்கம் வென்றனர்

மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டியில் தங்கம் வென்றனர்

1450
0
SHARE
Ad

விசாகப்பட்டினம் – இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள  விசாகப்பட்டினத்தில் நடந்த அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் பேராக், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளனர்.

முகமது பைசுல் பின் முகமது பர்து, விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மறுசுழற்சி தொடர்பாக புதிய ஆய்வினை இம்மாணவர்கள் படைத்தார்கள். இந்த மாணவர்களின் ஆய்வு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

#TamilSchoolmychoice

மகாத்மா காந்தி கலாசாலை வரலாற்றில் இதுவொரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியாவிலுள்ள பல தமிழ்ப் பள்ளிகள் இதுபோன்று தொடர்ந்து அனைத்துலக அளவில் வெற்றிகளைக் குவித்து வருவதும் தமிழ்ப் பள்ளிகளின் தோற்றத்தை உயர்த்தியுள்ளது.

இந்த அனைத்துலக வெற்றியைப் பற்றி கூறுகையில், “மாணவர்களின் உழைப்புக்கும் ஆசிரியர்களின் ஆதரவுக்கும் வழிகாட்டலுக்கும் கிடைத்த வெற்றி இது. தமிழ்ப்பள்ளி மாணவர் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த வெற்றி மிகச் சிறந்த மறுமலர்ச்சியாகவும் புதியதொரு உத்வேகமாகவும் உள்ளது என்றால் மிகையாகாது. நமது தமிழ்ப்பள்ளிகள் இதேபோல மிக உன்னத நிலைக்கு உயர வேண்டும்” என்று பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் தமது வாழ்த்துரையில் தெரிவித்தார். மேலும் மாணவர்களின் வெற்றிக்காக ஆதரவு தெரிவித்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறினார்.

பள்ளியின் ஆசிரியர்கள் கண்மணி, சங்கீதா ஆகிய இருவரும் மாணவர்களோடு இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆந்திராவின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் காந்த சீனிவாசராவ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

எதிர்வரும் 14.9.2018ஆம் நாளன்று இவ்விரு மாணவர்களும் ஆசிரியர்களும் தாங்கள் வெற்றி கொண்ட தங்கப் பதக்கத்தோடு மலேசியா திரும்புவார்கள்.