லாஸ் ஏஞ்சல்ஸ் – தனது கவர்ச்சியால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்டாஷியன். “கர்டாஷியன்ஸ்” என்ற பெயரில் அவரது குடும்ப சம்பவங்களைக் காட்டும் தொலைக்காட்சித் தொடரும் உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கொண்டிருக்கிறது.
2011-ஆம் ஆண்டில் கிம் கர்டாஷியனுக்கு தலைமறைவாகியிருக்கும் வணிகர் ஜோ லோ ஒரு வெள்ளை நிற பெராரி (Ferrari) காரை அன்பளிப்பாக வழங்கினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
2011-இல் கிம் கர்டாஷியன் கிரிஸ் ஹம்ப்ரிஸ் என்பவரைத் திருமணம் செய்தபோது ஜோ லோ அந்தக் காரை திருமணப் பரிசாக கர்டாஷியனுக்கு வழங்கியிருக்கிறார்.
சில மாதங்களுக்குப் பின்னர் கிம் கர்டாஷியன் கிரிஸ் ஹம்ப்ரிசை விவாகரத்து செய்தபோது, 325,000 அமெரிக்க டாலர் விலையில் வாங்கப்பட்ட அந்தக் கார் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் இருவருக்கும் இடையில் சச்சரவுகள் எழுந்தன.
கடந்த மாதம் மியாமி நகரில் கர்டாஷியன் அந்த வெள்ளை நிற பெராரியில் வந்திறங்கினார் என சில இணைய ஊடகங்கள் தெரிவித்தன. எனினும், ஜோ லோ வாங்கித் தந்த பெராரி கார்தானா அது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
1எம்டிபி விவகாரத்தில் உலகம் எங்கும் தேடப்படும் நபரான ஜோ லோ முறைகேடுகளின் மூலம் பெறப்பட்ட 1எம்டிபி பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து பல பிரபலங்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கித் தந்திருந்தார்.