கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை காலையில், ஊழல் தடுப்பு ஆணையத்தில் இருந்து காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவின் தலைமையகத்திற்குக் கொண்டுவரப்பட்ட நஜிப் துன் ரசாக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதை காவல் துறையின் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
நஜிப் மீது மொத்தம் 21 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ள தொகை 681 மில்லியன் ரிங்கிட் என்றும் நூர் ரஷிட் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பணத்தைப் பெற்றது, அந்தப் பணத்தைப் பயன்படுத்தியது, அந்த சட்டவிரோதக் கள்ளப்பணத்தை மற்ற நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு மாற்றியது ஆகியவையும் இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
அரசாங்கத் தலைமை வழக்கறிஞருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் நூர் ரஷிட் தெரிவித்தார்.
நஜிப் இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நிறுத்தப்படுவார். அவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவது இது மூன்றாவது முறையாகும்.