தோக்கியோ – மீண்டும் 3-வது முறையாக ஜப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ஜப்பானின் மிக நீண்ட காலப் பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஷின்சோ அபே எதிர்வரும் நவம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு வருகை மேற்கொள்ள விருக்கிறார்.
இந்த வருகை வரலாற்றுபூர்வ ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காரணம் இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானிய இராணுவம் 1942 முதல் 1943 வரையில் பல்வேறு தருணங்களில் ஆஸ்திரேலிய நகரான டார்வின் மீது குண்டுமழை பொழிந்தது. அந்த குண்டு வீச்சுகளில் சுமார் 250 பேர் மரணமடைந்தனர்.
இந்த கசப்பான சம்பவத்தால் இதுவரையில் எந்த ஒரு ஜப்பானியப் பிரதமரும் டார்வின் நகருக்கு வருகை தந்ததில்லை.
நவம்பரில் டார்வின் நகருக்கு ஷின்சோ அபே மேற்கொள்ளவிருக்கும் வருகையின்போது அங்கு செயல்பட்டு வரும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 40 பில்லியன் டாலர் மதிப்பிலான திரவ இயற்கை எரிவாயு திட்டத்தைப் பார்வையிடுவார்.