Home கலை உலகம் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: ஏமாற்றம்…போரடிப்பு…பொருத்தமில்லா நடைமுறை!

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: ஏமாற்றம்…போரடிப்பு…பொருத்தமில்லா நடைமுறை!

2576
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சில வாரங்களாக அஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் சிறந்த பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சியான ‘சூப்பர் ஸ்டார்’ உண்மையிலேயே ஏமாற்றமளிப்பதாகவும், ஒரு பாட்டுத் திறன் போட்டிக்கான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை என்பதையும் வருத்ததுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இதே கருத்தைத்தான், பல செல்லியல் வாசகர்களும் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பாடல் திறன் போட்டிக்கு இருக்க வேண்டிய, பரபரப்பு, எதிர்பார்ப்பு, விறுவிறுப்பு என எந்தவித அம்சங்களும் இதில் இல்லை. முதல் கட்டமாக போட்டியின் கட்டமைப்பே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆனால், அறிவிப்பாளர்கள் மட்டும் நொடிக்கு நொடிக்கு பரபரப்பு, இறுதிச் சுற்றுக்கான விறுவிறுப்பு என அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதே மிகுந்த போரடிப்பாக இருக்கிறது.

பாடவரும் ஒவ்வொருவரும் முதல் பாடலிலேயே மதிப்பிடப் படுவதும், சிலர் அந்த முதல் பாடலிலேயே சிவப்பு விளக்கு காட்டப்பட்டு வெளியேற்றப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அந்த அளவுக்கு தகுதியில்லாத பாடகர்களை எப்படி தேர்வுச் சுற்றில் தேர்ந்தெடுத்தார்கள்? இந்த நடைமுறை தேர்வு முறையையே கேலிக்கூத்தாக்குகிறது. ஓரளவுக்கு பாடத் தெரிந்தவர்களைத்தான் முதல் சுற்றுக்கு அனுமதிக்க வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு சில வாய்ப்புகள் தந்து – அதுவும் வேறுவேறு மாதிரியான பாடல்களைப் பாட வைத்து, அதன் பின்னரே அவர்களின் ஒட்டுமொத்த புள்ளிகளைச் சேர்த்து அவர்கள் தொடரத் தகுதியானவர்களா அல்லது வெளியேற்றப்பட வேண்டியவர்களா என்பது முடிவு செய்யப்பட வேண்டும்.

இதுதான் பொதுவாகப் பாடல் திறன் போட்டிகளில் பின்பற்றப்படும் நடைமுறை.

அப்படியில்லாமல், முதல் சுற்றிலேயே அனைத்து நீதிபதிகளும் சிவப்பு விளக்கு தந்து ஒரு பாடகரை வெளியேற்றுவதைப் பார்க்கும்போது அந்த அளவுக்கு மோசமான பாடக் கூடியவர்களை எப்படி இந்தப் போட்டியில் நுழைவதற்கு தேர்வு நீதிபதிகள் முதலில் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடந்தேறிய சூப்பர் சிங்கர் பாடல் திறன் போட்டியில் பின்பற்றப்பட்ட நடைமுறை சிறப்பானதாக இருந்தது. அந்த அடிப்படையில் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியையும் கட்டமைத்திருக்கலாம்.

குறைந்த புள்ளி கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்காத மர்மம்…

சரி! அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பின்பற்றப்படும் நடைமுறைப்படியே பார்த்தாலும், முதல் பாடலைப் பாடி உள்ளே நுழையும் எந்தப் பாடகரும் ஆகக்குறைந்த புள்ளிகள் பெற்ற பாடகரைத்தானே போட்டிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்? எந்த புதிய பாடகரும் கூடுதலான புள்ளிகள் பெற்று அமர்ந்திருக்கும் பாடகரைத் தேர்ந்தெடுத்து தனது வாய்ப்பைப் பறிகொடுக்க எண்ண மாட்டார்.

ஆனால் அப்படிச் செய்யாமல் அதிகமான புள்ளிகளைப் பெற்ற பாடகர்களை அவர்கள் வலுக்கட்டாயமாகத் தேர்ந்தெடுப்பது “இது செட்டிங்கோ?” என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

உண்மையான போட்டி நடைமுறையை அப்படி வைத்திருந்தால், ஒவ்வொரு போட்டியாளரும் ஆகக் குறைந்த புள்ளிகள் கொண்டவரை மட்டுமே போட்டிக்கு அழைக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். அதிக புள்ளிகள் பெற்றவர்கள் அப்படியே இறுதி வரை அமர்ந்திருக்கும் – கேலிக் கூத்தும் அரங்கேறியிருக்கும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் போட்டிக்கு வருபவர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெற்றவர்களைப் போட்டிக்கு அழைக்கிறார்களோ என்ற எண்ணம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகின்றது.

உதாரணமாக, கடந்த வாரம் ஒளியேறிய நிகழ்ச்சியில் அதிக புள்ளிகள் பெற்றிருந்த நேசன் என்ற பாடகர் வெளியேற்றப்பட்டார். ஐந்து பாடகர்கள் அமர்ந்திருக்க அவர்களுக்குள் சிறந்த பாடகர் யார்? அடுத்த சுற்றுக்கு செல்லக் கூடிய தகுதி கொண்டவர் யார்?  என்ற அடிப்படையிலான போட்டி இல்லாமல்,

ஆகக் குறைந்த புள்ளிகள் பெறுபவர் போட்டியிலிருந்து வெளியேற வேண்டும் –  என்ற பொதுவான நடைமுறை பின்பற்றப்படாமல் –

திடீரென உள்ளே நுழையும் ஒருவர் ஐவரில் ஒருவரைப் போட்டிக்கு அழைப்பதும், பின்னர் அவரை விடக் கூடுதல் புள்ளிகள் பெற்றால், சிறந்த பாடகர் வெளியேறுகின்ற அவலமும், புதிய பாடகர் உள்ளே நுழைவதும் – வெளியேறுகின்ற பாடகரை விடக் குறைந்த புள்ளிகள் கொண்ட ஒரு பாடகர் உள்ளேயே வெற்றியாளராக அமர்ந்திருப்பதும் எந்தவிதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. இது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத போட்டி நடைமுறையாகத் தெரிகிறது.

தமிழ் நாட்டில் பல பாடல் போட்டிகளில் நீதிபதியாக இருந்த தலைமை நீதிபதி ஜேம்ஸ் வசந்தனும் இதுபோன்றதொரு நடைமுறைக்கு எப்படி ஒப்புக் கொண்டார் என்பது தெரியவில்லை.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இதுகுறித்து ஆழ்ந்து சிந்திப்பது நல்லது!

பாராட்டத்தக்க சில அம்சங்கள்

அதே வேளையில் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் சில பாராட்டத்தக்க அம்சங்களையும் நாம் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். நிகழ்ச்சியின் அரங்க அமைப்புகளும், அறிவிப்பாளர்களின் ஆடை அலங்காரங்களும் அனைத்துலகத் தரத்தில் அமைந்திருக்கின்றன. ஒளிப்பதிவும் உயர்தரமாக இருக்கிறது.

தலைமை நீதிபதி ஜேம்ஸ் வசந்தன் பாரபட்சமின்றி தனது கூர்மையான விமர்சனங்களை முன்வைப்பது போட்டியின் நடுநிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய கலைஞரை துணை நீதிபதியாகவும், கருத்துரைப்பாளராகவும் கொண்டு வருவதும் சிறப்பானதாகவும், நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பையும்  தருகின்ற ஓர் அம்சமாகும்.

பாடகர்களும், அறிவிப்பாளர்களும் சில வர்ணனைகளில், சில வார்த்தை ஜாலங்களில் கவனம் செலுத்துவது நல்லது. கடந்த வாரத்தில் ஒளியேறிய நிகழ்ச்சியில் பாட வந்த பாடகர் “இங்கே அமர்ந்திருக்கும் ஐந்து நரிகளில்…” என போட்டிப் பாடகர்களை வர்ணித்தது எந்த இரகத்திலானதோ தெரியவில்லை!

சூப்பர் ஸ்டார் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் போட்டியின் கட்டமைப்பையோ, விதிமுறைகளையோ இடையில் மாற்றுவது சாத்தியமா? முறையாக? என்பது தெரியவில்லை.

ஆனால், போட்டிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நடப்பு கட்டமைப்பு ஏமாற்றம் தருவதாகவும், போரடிப்பாகவும் – அறிவிப்பாளர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக பரபரப்பில்லாமலும் – இருக்கிறது என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.

அதைவிட முக்கியமாக, பாடகர்களுக்கிடையே யார் சிறந்த பாடகர் என்பதை வெளிக் கொண்டு வரும் நடைமுறை இல்லாமல், உள்ளே புதிதாக வரும் ஒருவர் ஏற்கனவே வெற்றி பெற்ற பாடகர் ஒருவரைப் போட்டிக்குத் தேர்வு செய்து அவரைத் தோற்கடித்து போட்டியிலிருந்தே வெளியேற்றுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத நடைமுறை. இதனால் நல்ல பல பாடகர்கள் போட்டியின் பாதியிலேயே வெளியேறும் பரிதாபமும் நேர்கிறது.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கவனிப்பார்களா?

-செல்லியல் விமர்சனக் குழு