கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்திய காரணத்தால் தினகரனைச் சந்தித்தது உண்மையே என ஓபிஎஸ் ஒப்புக் கொண்டார். எனினும், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் அவரைச் சந்திக்கவில்லை என்றும் தான் நடத்திய தர்மயுத்தம் என்பதே சசிகலா – தினகரன் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்பதை நிலைநிறுத்தத்தான் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
“மிகவும் வற்புறுத்துகிறார்களே என்று அரசியல் நல்லெண்ணத்தின் காரணமாக தினகரனைச் சந்தித்தேன். ஆனால் அவரோ எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், மீண்டும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்” என்றும் பன்னீர் செல்வம் மேலும் கூறினார்.
ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த விளக்கங்களில் மேலும் சில முக்கிய அம்சங்கள்:
- ஏற்கனவே 3 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனியும் முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை. அதேவேளையில் குறுக்கு வழியில் முதலமைச்சராகும் ஈனத்தனமான எண்ணம் எனக்கில்லை.
- திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுகவின் பிரம்மாண்டமான கூட்டத்தைத் தொடர்ந்து எங்களின் கட்சி உறுதியோடும், தொண்டர்களின் ஆதரவோடும் இயங்குவதைப் பார்த்து பொறாமை கொண்டிருக்கும் தினகரன் தோல்வி பயத்தால் இதுபோன்ற பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
- எந்தக் காரணத்தைக் கொண்டும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க மாட்டேன்.
- அரசியல் நாகரிகம் கருதியே தினகரன் சந்திப்பு குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் அந்த அரசியல் நாகரிகம் தெரியாதவர் என்பதை தினகரன் நிரூபித்து விட்டார்.