
பாங்காக் – பாங்காக்கிற்குத் தெற்கே உள்ள உவா இன் என்னும் ஊரில் அமைந்துள்ள கடற்கரை உல்லாச விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனம் வழங்கும் விருந்தோம்பலோடு தொடங்குகிறது தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய எழுத்துருவியல் (Typographic Symposium) மாநாடு.
கணினி மற்றும் செல்பேசிகளில் இயங்கும் குறுஞ்செயலிகளில் இடம் பெறும் மொழிகளின் எழுத்துருக்களை வடிவமைப்பதும், பயனர்களின் பயன்பாட்டிற்கு அவற்றை இலகுவான முறையில் அமைப்பதற்கான முயற்சிகளும் எழுத்துருவியல் துறையின் கீழ் வருகின்றன. இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற, தொடர்புடைய பலர் அண்டை வட்டாரங்களில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் முகாமை உரை (Key Note Presentation) ஒன்றை வழங்குவதோடு, தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலிலும் கலந்து கொள்கிறார்.
இதே மாநாட்டில் ‘தெற்காசிய எழுத்துருவாக்கச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பிலான பட்டறை ஒன்றையும் முத்து நெடுமாறன் நடத்துகிறார். மாநாட்டில் கலந்து கொள்ளும் துறை சார்ந்த புலமை கொண்ட பல நண்பர்களையும், நிபுணர்களையும் சந்தித்து கருத்துப் பரிமாற்றங்களையும் முத்து நெடுமாறன் மேற்கொள்வார்.
