Home நாடு நேற்றுவரை சிறைவாசம்! நாளை முதல் நாடாளுமன்ற வாசம்!

நேற்றுவரை சிறைவாசம்! நாளை முதல் நாடாளுமன்ற வாசம்!

1106
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகில் எந்த ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கையிலும் இத்தனை அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்திருக்குமா – காலம் இப்படியெல்லாம் ஒருவரை சுற்றிச் சுழற்றிப் போடுமா – எந்த ஒரு நாவலாசிரியராவது இத்தகையத் திருப்பங்களோடு ஒரு கதையை உருவாக்குவார்களா – அப்படியே உருவாக்கினாலும் அதைப் படிக்கும் வாசகர்கள் நம்புவார்களா – என அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன அன்வார் இப்ராகிமின் வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்க்கும்போது!

நேற்று போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதோடு, தனது அரசியல் வாழ்க்கையில் அதுவும் 71-வது வயதில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கியிருக்கிறார் அன்வார். காலமும், உடல் நலமும், கடவுள் அனுக்கிரகமும் அவருக்கு ஒத்துழைத்தால் இன்னும் ஒரே ஒரு அடியை அவர் எடுத்து வைத்தால் போதும் – நாட்டின் பிரதமராகி விடுவார்!

இதோடு அவர் கதை முடிந்தது என அவரது அரசியல் எதிரிகளும், பார்வையாளர்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முறையும் வீழ்ச்சியிலிருந்து வீறுகொண்டு எழும் அரசியல் வியூகம், ஆளுமை, மக்களின் ஆதரவு அன்வாருக்கு மட்டுமே இருந்தது.

போர்ட்டிக்சன் முடிவுகள் தரும் முக்கியப் பாடம்

#TamilSchoolmychoice

மலேசியாவில் எந்தப் பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெல்லும் ஆற்றல் தனக்குண்டு என்பதை போர்ட்டிக்சன் வெற்றி மூலம் சாதித்திருக்கிறார் அன்வார். இதற்கு முன், லிம் கிட் சியாங், லிம் குவான் எங் போன்றவர்கள் மட்டுமே சீன வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் மாறி மாறி நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். பொதுவாக மலாய் அரசியல்வாதிகள் இதுபோன்ற விஷப் பரிட்சைகளில் இறங்க மாட்டார்கள். பொதுவாக மாநிலம் கூட மாறி நிற்க மாட்டார்கள். அந்த வழக்கத்தை முறியடித்திருக்கிறார் அன்வார்.

மே 9 பொதுத் தேர்தலில் 82 விழுக்காட்டு வாக்குகள் பதிவான நிலையில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் டேன்யல் பாலகோபால் அப்துல்லா வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அன்வாரோ, 58 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

அன்வாரே கூறியபடி, பல இன மக்களின் ஆதரவோடுதான் அவரால் இவ்வளவு பெரிய பெரும்பான்மையில் வெல்ல முடிந்திருக்கிறது.

சிறையிலிருந்து அரண்மனைக்கு…

மே 9 பொதுத் தேர்தல் வெற்றியை மக்களும், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களும் குதூகலித்துக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அன்வாரோ சிறைவாசத்தில் இருந்தார். உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் தங்கியிருந்தார்.

அடுத்த சில நாட்களில் சட்டபூர்வமாக அவர் விடுதலை செய்யப்பட்ட, மருத்துவமனையிலிருந்து சிறைக்கைதியான அவர் விடுதலையானதும் நேராகச் சென்றது அரண்மனைக்கு மாமன்னரைச் சந்திக்க!

வேறு யாருக்கும் இதுபோல் இனி வாய்க்குமா – தெரியவில்லை.

நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கண்டபடி, படிப்படியாக அன்வார் குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, அவருக்காக இடைத் தேர்தலும் உருவாக்கப்பட்டு, இதோ போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

நாளை திங்கட்கிழமை அக்டோபர் 15-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்போது அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார்.

அதைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அதிரடி உருமாற்றங்களை மகாதீர் மேற்கொள்ள, நாடாளுமன்றம் வாயிலான உருமாற்றங்களை அன்வார் செயல்படுத்த முனைவார்.

மே 9-ஆம் தேதியன்று சிறைவாசத்தில் இருந்த ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடந்த 5 மாதங்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள்?

எனினும் ஆட்டம் இன்னும் முடியவில்லை.

மர்மக் கதையின் உச்சகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு போல, அன்வார் வாழ்க்கையின் உச்சகட்ட சம்பவமாக அவர் பிரதமராவாரா என்ற அடுத்த கட்டத் திருப்பம் நிகழுமா என மலேசியர்கள் ஆவலுடனும், ஆர்வத்துடனும் காத்திருக்கின்றனர்.

மகாதீர் இரண்டு வருடங்களில் பதவி விலகுவாரா – அறிவித்தது போல் அன்வாருக்கு பிரதமர் பதவியை விட்டுத் தருவாரா – மலேசிய கட்சிகளுக்கிடையில் வேறு மாதிரியான எதிர்பாராத கூட்டணி மாற்றங்கள் நிகழுமா – அன்வாருக்குப் பிரதமராகும் பிராப்தம் உண்மையிலேயே வாய்த்திருக்கிறதா – என்பது போன்ற கேள்விகளுடன் புதிய மலேசியாவின் அரசியல் பயணம் தொடர்கிறது.

அதனூடே அன்வார் இப்ராகிமின் அரசியல் வியூகக் காய் நகர்த்தலும் தொடர்கிறது.

-இரா.முத்தரசன்