கோலாலம்பூர் – பல தமிழ்ப் படங்கள் தமிழகத்தின் சாதிக் கொடுமைகளை, நிலவரங்களை ஆங்காங்கே சில காட்சிகளில் பட்டும் படாமல் பேசியிருக்கின்றன. சில படங்களில் மறைமுகமான வசனங்கள், சம்பவங்கள் மூலம் சாதிப் பிரச்சனைகள் இலை மறை காயாக காட்டப்பட்டிருக்கின்றன.
ஆனால், முழுக்க முழுக்க சாதியக் கொடுமைகளை இந்த அளவுக்கு பட்டவர்த்தனமாகவும், யதார்த்தமாகவும் காட்டி, அதனை அடிப்படையாக வைத்தே முழுப் படமும் எடுக்கப்பட்டிருப்பது நினைவுக்குத் தெரிந்து இதுவே முதல் முறையாகும்.
ஆனால், கத்திமேல் நடப்பது போல் நடந்து, முகஞ்சுளிக்க வைக்காமல், ஒரு சாதிக்கு இன்னொரு சாதிமேல் வெறுப்பு வந்துவிடாத வண்ணம், மிக அழகாக வசனங்களையும், திரைக்கதையையும் அமைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் ஓர் எழுத்தாளரும்கூட!
ஆனால், நமக்கோ சில காட்சிகளில் நெஞ்சம் பதைபதைக்கிறது. இப்படியும் நடக்குமா என இருதயமே உறைந்து விடுகிறது.
ஒரு தலித் சமூக மாணவன் சட்டக் கல்லூரிக்கு வந்து படிக்க முனையும்போது அவனுக்கு நேரும் இடர்கள், சிக்கல்கள், சமூகப் பார்வைகளின் அவலங்கள், வேற்று சாதிப் பெண்ணுடன் நெருங்கிப் பழகினால் அவனுக்கு ஏற்படும் கொடுமைகள் – இதுதான் கதை.
ஆனால், சம்பவங்களின் மூலம் அந்தக் கதையைக் காட்சிப் படுத்தியிருப்பதில் இயக்குநர் சில சமயங்களில் கண்ணீர் வரும் அளவுக்கு நெஞ்சைப் பிசைந்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள் என்ற வித்தியாசப் பெயர் கொண்ட – சுருக்கமாக பரியன் என அழைக்கப்படும் இளைஞனின் கதைதான் படம். அவனது வேட்டை நாய்க்கு முதல் சில காட்சிகளில் நிகழ்த்தப்படும் கொடுமைகள் மூலம் நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம். கருப்பி என்ற அந்த நாயும், அதைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சம்பவங்களும் பலரது இதயங்களில் இருந்து நீண்ட காலத்திற்கு அகலாது.
படத்தில் காட்டப்படும் சாதியக் கொடுமைகளைப் பார்க்கும்போது நமக்கும் ஆத்திரம் தலைக்கேற , நாமே இறங்கி இந்தக் கொடுமைக்காரர்களை ஒரு வழி பண்ணி விடலாம் என்று உணர்ச்சிவசப்படும் அளவுக்கு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், இவையெல்லாம் தனிப்பட்ட விரோதமோ, குரோதமோ அல்ல – சமுதாய அமைப்பின் கோளாறுகள் என்று காட்டுவதிலும், படம் முழுக்க பாதிப்படைந்தவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வண்ணம் இதையெல்லாம் முறியடித்து வெற்றி காண வேண்டும் என்ற வெறியை அவர்களுக்கு உணர்த்துவதிலும் இயக்குநர் வெற்றியடைந்திருக்கிறார்.
மகளுடன் பழகும் பரியனிடம் அவளது அப்பா “டேய் உன்னை மட்டுமல்ல. என் மகளையும் கொன்னுருவாங்கடா! வேண்டாம்டா” என கண்கலங்கும் ஒரே வசனத்தில் சமூக அமைப்பின் அவலத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
அதே போல, கல்லூரியின் தலைவராக வருபவர் பரியனுக்கு ஓரிடத்தில் கூறுகிறார் – “எங்க அப்பா தெருவுல செருப்பு தைக்கும் தொழிலாளி. நான் படிக்கும்போது என்னை மட்டும் படிக்க விட்டாங்களா என்ன. அதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இன்னைக்கு எல்லாரும் என்னிடம் வந்து ஐயா – சாமின்னு நிற்கிறாங்க. அப்படி சாதிச்சுக் காட்டு” என்கிறார்.
இன்னொரு இடத்தில் “பரியனைக் கல்லூரியில் இருந்து நீக்கி விடுங்கள் இல்லாவிட்டால் இவனால் வீண் சண்டை வரும்” என சக ஆசிரியர் கூற அதற்குக் கல்லூரி தலைவரோ, பரியனை மீண்டும் மன்னித்துக் கல்லூரியில் அனுமதித்துவிட்டு, “பரவாயில்லை. இவன் போய் வீட்டுக் கூரையில தூக்குல தொங்கி சாகிறதை விட, சண்டை போட்டு அந்த சண்டையில சாவட்டுமே” என்று கூறும்போது திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள்.
அதே போல படத்தின் இறுதியில் தீர்வைச் சொல்ல முற்படாமல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம் என முடித்திருப்பதும் பாராட்டத்தக்கது.
படத்தில் உச்சகட்டமாக நம்மை உறைய வைப்பது பரியனின் அப்பாவுக்கு நேரும் அவலம். முக்கால் வாசிப் படம் வரையில் பரியனின் அப்பாவைக் காட்டாமல் ஒரு கட்டத்தில் காட்டும் நமக்கும் பகீர் என்கிறது. பின்னர் அவருக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடூரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதைப் படம் பார்த்துத்தான் உணர்ந்து கொள்ள முடியும்.
சாதியைத் தூக்கிப் பிடிப்பதற்காக கொலை செய்வதைக் கூட குலசாமிக்கான சேவை எனக் கூறும் கொடூரமான கிழவனின் கதாபாத்திரம் – இப்படியும் இருப்பார்களா என நமக்குள் கேள்வி எழுப்புகிறது. ஆனால், இருக்கிறார்கள் என்பதுதான் அண்மையக் காலங்களில் தமிழகத்தில் நிகழும் சாதிய ரீதியிலான ஆணவக் கொலைகள் நமக்கு எடுத்துக் காட்டும் நிதர்சன உண்மை.
ஆனால், எங்கேயிருந்து பிடித்தார்கள் அந்தக் கிழவனை என நாம் கேட்கும்படி அவ்வளவு பொருத்தமான உடல்மொழி, குரூரத்தைத் தேக்கி வைத்திருக்கும் கண்கள்.
இப்படியாக இந்தப் படத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். தமிழகத்தில் முதலில் வெளியாகி ஓரிரு வாரங்கள் கழித்தே மலேசியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்தப் படம்.
படத்தின் ஒளிப்பதிவு, வசனங்கள், திரைக்கதை, நடிப்பு, இசை என அத்தனை அம்சங்களும் அபாரம். கதாநாயகனாக கதிர், நாயகியாக அழகு முகத்தோடு ஆனந்தி. யோகிபாபுவுக்கு கலாய்ப்பு, நகைச்சுவையோடு நடிப்புக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது இந்தப்படம்.
ரஜினிகாந்த் படங்களை எடுத்து முன்னணி இயக்குநராகியிருக்கும் பா.ரஞ்சித் தான் சம்பாதித்ததை இதுபோன்ற சமூக உணர்வுகளைப் பேசும் படத்திற்காக செலவழித்திருப்பதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
படம் முடியும்போது திரையரங்கில் பலரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். அதுவே படத்தின் வெற்றி. மனதில் பதியும் சில படங்களுக்குத்தான் இரசிகர்கள் இவ்வாறு செய்வார்கள்.
பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்! தவற விட்டு விடாதீர்கள்!