
ஜாகர்த்தா – (பிற்பகல் 1.30 மணி நிலவரம்) இன்று திங்கட்கிழமை காலை விமான நிலையங்களுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் லயன் ஏர் விமானம் சுமத்ராவில் ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.
ஜாவா கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்த இடத்தில் விமானத்தின் சிதறிய பாகங்கள் காணப்படுவதாகவும், படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் இந்தோனிசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அந்த விமானம் கடலில் விழுந்ததைப் பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.