Home வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

1252
0
SHARE
Ad

இப்போதெல்லாம் காலையில் தூங்கி எழுந்ததும், முதலில் பல் துலக்கும் வழக்கம் என்பதை விட பேஸ்புக்கில் – முகநூலில் – இன்று காலை யார் என்ன பதிவிட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதுதான் நடைமுறை என மாறிவிட்டது.

அடுத்து, நாம் என்ன பதிவு செய்யலாம், எதைப் போட்டால் லைக்ஸ் – அதாவது சக பேஸ்புக் தொடர்பாளர்களின் விருப்பங்களை – அள்ளலாம் என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறோம்.

அமெரிக்காவில் இருக்கும் தனது மகன் நேற்று இரவு விருந்துக்கு சென்ற போது, அங்கு என்ன சாப்பிட்டான் என்பதை அவன் பதிவிட்டுப் பகிர்ந்து கொள்ளும் புகைப்படம் மூலம் தெரிந்து கொள்கிறார், கோலாலம்பூரில் இருக்கும் அவனது தாயார்!

#TamilSchoolmychoice

பாரிஸ் நகரில் திடீரென தொடர் குண்டுவெடிப்பு என செய்தி. பலரும் அங்கிருக்கும் தங்களின் நண்பர்களும் உறவினர்களும் என்ன ஆனார்கள், எந்த இடத்தில் குண்டு வெடித்தது எனக் கவலைப்படத் தொடங்கிய சில கணங்களுக்குள் பேஸ்புக் சிறப்புப் பக்கம் ஒன்றைத் திறக்கிறது.

அதில் பாரிஸ் நகரில் வசிக்கும் – பேஸ்புக்கில் வலம் வரும் – மக்கள் உடனே தாங்கள் நலமாக இருப்பதாகப் பதிவிடுகிறார்கள். ஒரு நொடிக்குள் உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் அவர்களின் சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

பேஸ்புக்கினால் சில அவலங்களும் நேர்வதுண்டு. கார்விபத்து நடந்து ஒருவர் அடிபட்டுக் கிடந்தால், முதலில் அதனைப் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுப் பகிர்ந்து விட்டு பிறகுதான் அடிபட்டவருக்கு உதவுவதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் – மனித நேயம் – மறைந்து போனதும் பேஸ்புக்கினால்தான்!

இப்படித்தான் உலகையும், நம்மையும் மாற்றிவிட்டது பேஸ்புக்.

ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாக – நண்பர்களுக்கு இடையிலான தொடர்புத் தளமாகத் தொடங்கப்பட்ட பேஸ்புக் அப்போதே அந்தப் பல்கலைக் கழகத்தின் பாதி மாணவர்களை ஆர்வத்தால் இணைத்தது.

அந்தப் புள்ளியில் தொடங்கிய பயணம் பின்னர் 2004-ஆம் ஆண்டில் மார்க் சக்கர்பெர்க், எடுவார்டோ சவரின், அண்ட்ரு மெக்கோல்லம், டஸ்டின் மோஸ்கோவிட்சாண்ட் போன்ற நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனமாக தோற்றுவிக்கப்பட்டது.

மற்ற பெயர்களெல்லாம் மக்களால் மறந்து போய்விட, இன்று பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க்தான் அதன் முகமாகப் பார்க்கப்படுகிறார். அந்நிறுவனம் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்து விட்டார் என்பது இன்னொரு கிளைக் கதை.

கலிபோர்னியாவில் மென்லோ பார்க் என்ற இடத்தில் தலைமையகத்தைக் கொண்டு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே போக, சந்தை மதிப்போ 520 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக உயர்ந்து கொண்டிருக்க, வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் போன்ற மற்ற சமூக ஊடகங்களையும் இணைத்துக் கொண்டு, இன்று உலகின் முன்னணி சமூக ஊடகத் தளமாக, “நான் இல்லாவிட்டால் உங்களால் இயங்க முடியாது” என்றும் கூறும் அளவுக்கு, மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து சவால் விட்டுக் கொண்டிருக்கிறது பேஸ்புக்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’