வாழ்க்கையையும், உலகையும் மாற்றிய நிறுவனம் என்ற வகையில் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என நீங்கள் யோசிக்கலாம். ‘அல்பாபெட்’ (Alphabet) நிறுவனத்தின் பெயர் அவ்வளவு பிரபலமில்லை. ஆனால், அவர்கள் இயக்கும் தொழில்நுட்பங்களின் வணிக முத்திரையின் (பிராண்ட்) பெயர் நுழையாத மனித வாய்களே இருக்க முடியாது.
ஆம்! நாம் அன்றாடம் கணினியின் இணையத் தளங்களில் பயன்படுத்தும் கூகுள் தேடுபொறியின் தாய் நிறுவனம்தான் அல்பாபெட்.
கூகுள் இல்லாமல் இணையத்தில் நீங்கள் எதையுமே தேடிக் கண்டு பிடிக்க முடியாது – உங்கள் அன்றாட வாழ்க்கையும் ஓடாது – என்ற நிலைமையை உருவாக்கிவிட்டது இந்த நிறுவனம்.
லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என இரண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக மாணவர்கள் கனவில் உதித்த கூகுள் தொடங்கப்பட்ட ஆண்டு 1998. பின்னர் பங்குச் சந்தை நிறுவன மாற்றங்களால் தற்போது கூகுள், அல்பாபெட் நிறுவனத்தின் கீழ் 2015 முதல் செயல்பட்டு வருகிறது.
கூகுள் தவிர, செல்பேசிகளில் இயங்கும் அண்ட்ரோய்ட் இயங்குதள மென்பொருள், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் கண்டு களிக்கும் யூடியூப் காணொளித் தளம் போன்றவையும் அல்பாபெட் நிறுவனத்தின் கீழ் அடக்கம்.
இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் – உங்கள் வாழ்க்கையை இந்த அல்பாபெட் நிறுவனம் எவ்வாறு மாற்றியமைத்திருக்கிறது என்று!
ஆப்பிள் ஐபோன்கள் தவிர, ஏறத்தாழ மற்றவகைக் கைத்தொலைபேசிகள் அனைத்திலும் இயங்குவது அண்ட்ரோய்ட் இயங்குதளம்தான்.
முன்பெல்லாம், ஒரு தமிழ்ப் படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) வெளிவருகிறதென்றால் அதனை திரையரங்குகளுக்கு சென்று மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இப்போதோ, முதலில் படக் குழுவினர் அத்தகைய முன்னோட்டங்களை வெளியிடுவது யூடியூப் தளத்தில்! அதனை எத்தனை மில்லியன் பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்துத்தான் படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறுகிறது.
அந்த வகையில் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட விஜய்யின் சர்கார் படத்துக்கு இன்றைய தேதியில் 26 மில்லியனையும் தாண்டிய பார்வையாளர்கள் – உலகில் அதிகம் பேர் பார்த்த முன்னோட்டம் இதுதான் – எனத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதில் இருந்து யூடியூப்பின் தாக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் எங்கும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், சுமார் 800 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு என இன்னும் அசுர வளர்ச்சி கண்டு வரும் அல்பாபெட் நிறுவனம் அமெரிக்காவின் மவுண்டன் வியு (Mountain View, California) என்ற நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
கூகுள் என்றதும் நாம் நெஞ்சை உயர்த்திக் கொள்ளக் கிடைத்திருக்கும் மற்றொரு பெருமை அதன் தலைமைச் செயல் அதிகாரி ஒரு தமிழர் – சுந்தர் பிச்சை – என்பதுதான்!
-இரா.முத்தரசன்
தொடர்புடைய கட்டுரைகள்:
வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்
வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்
வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்