Home வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

1308
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சுமார் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதலிடம் வகித்தவை பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள். ஆனால் இன்றோ, நிலைமை மாறிவிட்டது.

உலகின் மிகப் முதல் 10 நிறுவனங்களில் பெரும்பான்மையானவை தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் வாய்ந்த நிறுவனங்கள். அதிலும் இந்த 10 நிறுவனங்களின் தனித்துவம், தனிச்சிறப்பு என்னவென்று பார்த்தால், இந்த நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து விட்டது என்பதோடு, உலகின் போக்கையே திசை திருப்பிவிட்டது எனலாம்.

அவ்வாறு நமது வாழ்க்கையையும், உலகின் போக்கையும் மாற்றியமைத்த அந்த 10 நிறுவனங்கள் யாவை – எப்படி அவை இந்த சாதனையை நிகழ்த்தின என்பதை இந்த வரிசையில் சுருக்கமாகப் பார்ப்போம்.

# 1 – ஆப்பிள் நிறுவனம்

ஸ்டீவ் ஜாப்ஸ்
#TamilSchoolmychoice

1 ஏப்ரல் 1976-இல் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வேய்ன் ஆகிய மூவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அண்மையில் பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ஆயிரம் பில்லியன் டாலர்) மதிப்பைத் தொட்டது.

இதில் சுவாரசியம் என்னவென்றால், ஆப்பிளின் நடுநாயகமாகத் திகழ்ந்த ஸ்டீவ் ஜாப்சையே 1985-இல், அவரது 30-வது வயதிலேயே அந்நிறுவனம் வெளியேற்றியது. வெளியே சென்ற ஜாப்ஸ் தனியே இன்னொரு தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடக்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிள் நஷ்டத்தை நோக்கி நகர, விழித்துக் கொண்ட நிறுவன இயக்குநர் வாரியம், மீண்டும் ஜாப்சை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்றது.

மீண்டும் தனது ‘தாய்’ நிறுவனத்திற்குத் திரும்பிய ஜாப்ஸ் ஆப்பிளுக்கு வெளியே தான் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களையும், ஆப்பிள் நிறுவனத்தின் வலிமை வாய்ந்த வணிக முத்திரையையும் (பிராண்ட்), தனது சொந்த தலைமைத்துவத்தையும் ஒருங்கிணைக்க புதிய ஆப்பிள் அசுர வேகத்தில் வளர்ந்தது.

முதலில் கணினிகள் தயாரிப்பு என்று தொடங்கி பின்னர் ஸ்டீவ் ஜாப்சின் அபார மூளையால், ஐபோன் என்ற பெயரில் நவீன செல்பேசிகளைக் கண்டுபிடித்து, அதனை தொழில்நுட்பத்தோடு கூடிய திறன் பேசிகளாக (ஸ்மார்ட்போன்) உருமாற்றி உலகின் திசையையே மாற்றியமைத்ததில் ஆப்பிள் நிறுவனத்திற்கு முதலிடம் உண்டு.

டிம் குக் – ஆப்பிள் நிறுவனத்தின் நடப்பு தலைமைச் செயல் அதிகாரி

இன்றைக்கு உலகையே மாற்றியமைத்தது செல்பேசிகள் என்றால், அதற்கு அச்சாரமிட்ட முன்னோடி ஆப்பிள். இன்றைக்கு நாம் செல்பேசியில் செய்யக் கூடிய பலவற்றை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்தான்.

ஜாப்சின் மறைவுக்குப் பின்னரும் டிம் குக் போன்ற திறமை வாய்ந்தவர்களின் தலைமைத்துவ ஆற்றலால் இன்னும் பீடு நடை போடுகிறது.

கலிபோர்னியாவின் குப்பர்ட்டினோ நகரில் தலைமையகத்தைக் கொண்ட ஆப்பிள், உலகம் எங்கும் சுமார் 123,000 ஊழியர்களைக் கொண்ட நிறுவனம்.

ஐபோன்களுக்குப் பிறகும் ஐபேட் என்ற கையடக்கக் கருவி, ஆப்பிள் வாட்ச் என்ற நவீன தொழில்நுட்ப கைக்கெடிகாரங்கள், செல்பேசிகள் மூலம் கட்டணம் செலுத்துதல் என பல முனைகளில் தனது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் சென்று, நாம் எப்படி சிந்திக்கிறோம், எப்படிச் செயல்படுகிறோம் என்பதையெல்லாம் மாற்றிவிட்டது ஆப்பிள்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய கட்டுரைகள்:

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’