Home வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

1521
0
SHARE
Ad

ஒரு நல்ல நூலைப் பற்றிக் கேள்விப்படுகிறீர்கள், உடனே அதனை வாங்க விரும்புகிறீர்கள். அடுத்தடுத்ததாக நீங்கள் செய்வது அருகிலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று அந்த நூல் இருக்கிறதா எனக் கேட்கிறீர்கள். இருந்தால் வாங்குவீர்கள். இல்லையென்றால், அந்த நூலின் மீது உங்களுக்கு இன்னும் ஆர்வமிருந்தால், இன்னொரு கடைக்குச் சென்று அந்த நூல் இருக்கிறதா என்று தேடுவீர்கள்.

இதையே, இன்று 2018-ஆம் ஆண்டில் யாரும் செய்வதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் கணினி முன் அமர்ந்து அமேசோன்.காம் என்ற இணையத் தளத்திற்குள் நுழைந்து, அந்த நூல் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். இருந்தால் உடனே அந்த நூலுக்கான விலையை பற்று அட்டைகள், அல்லது வங்கிக் கணக்குகள் மூலமாக இணையத்திலேயே செலுத்துகிறார்கள். அடுத்த சில நாட்களில் உங்கள் வீட்டின் கதவைத் தட்டி உங்கள் கைகளில் அந்த நூலைத் தருகிறார்கள்.

இந்த மாற்றத்தை இன்றைய மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய நிறுவனம் அமேசோன். நூல் என்பது ஓர் உதாரணம்தான். குண்டூசியிலிருந்து, பழங்கள், நவீன சாதனங்கள் என நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத, ஒரே கூரையின் கீழ் பார்க்க முடியாத – அத்தனை பொருட்களையும் விற்பனை செய்கிறது அமேசோன்.

#TamilSchoolmychoice

அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை? அதிர்ச்சியடையாதீர்கள் – சுமாராக 2 பில்லியன்தான். நிறுவனத்தின் மதிப்போ 1 டிரில்லியனைத் தாண்டி விட்டது. அதன் காரணமாக, அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் (படம்) இன்றைய நிலவரப்படி உலகின் மிகப் பெரிய பணக்காரராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்த நிறுவனம் 1994-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, ஜெப் வீட்டின் ஒதுக்குப் புறமான கார் நிறுத்தும் கொட்டகையில்தான். இன்றைக்கு அமெரிக்காவின் சியாட்டல் நகரைத் தலைநகராகக் கொண்டு, அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் அமேசோன்.

சுமார் 566,000 பணியாளர்களுடன் இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது அமேசோன். உலகின் மிகப் பெரிய இணையத் தள விற்பனை நிறுவனம் இதுதான்.

ஜெப் பெசோசின் புத்தகங்கள் படிக்கும் ஆர்வமும், இணையத் தள வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தூரநோக்குச் சிந்தனையும் ஒரே புள்ளியில் இணைந்ததால் பிறந்ததுதான் அமேசோன்.

கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு சொகுசான வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெப் பெசோஸ் இணையத் தளத்தின் அசுரத்தனமான வளர்ச்சியை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தபோது இலட்சக்கணக்கான சம்பளம், ஊக்கத் தொகை (போனஸ்) என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு அமேசோனைத் தொடக்கினார்.

இணையம் வழி எதனை விற்கலாம், எதனை வாங்க மக்கள் முன்வருவார்கள் என ஜெப் பரிசீலித்து சுமார் 20 முக்கியப் பொருட்களைப் பட்டியலிட்டபோது, அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது புத்தகங்கள். அவரும் ஒரு புத்தகப் பிரியர் என்பதால் முதலில் புத்தகங்கள் விற்கும் இணையத் தள விற்பனையாளராகத் தொடங்கப்பட்ட அமேசோன் இன்றைக்கு நாம் எப்படிப் பொருட்களை வாங்குகிறோம், விற்பனை செய்கிறோம் என்ற நடைமுறையையே மாற்றியமைத்திருக்கிறது.

நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டிருக்கும் அமேசோன் பிரைம் என்ற திரைப்படங்கள், தொடர்கள் என இணையம் வழி கட்டணம் செலுத்திப் பார்க்கப்படும் நிறுவனமும் அமேசோனின் இன்னொரு முகம்.

ஆனால், ஜெப் பெசோசின் கனவு முயற்சி இன்னும் கைகூடவில்லை. தனது சம்பாத்தியத்தை, அமேசோனில் கிடைக்கும் வருமானத்தை ‘புளூ ஒரிஜின்’ (Blue Origin) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்.

விண்வெளிக்கு மனிதர்களை வாடகைக் கார்கள் போன்று வாடகை விண்கலங்களில் ஏற்றிச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனம்தான் புளூ ஒரிஜின்.

அதுதான், ஜெப்பின் சிறுவயதுக் கனவு – அதாவது நிலவுக்கும் விண்வெளிக்கும் செல்லவேண்டும் என்பது!

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’