Home நாடு “பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்

“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்

1028
0
SHARE
Ad
நாடாளுமன்ற வளாகத்தில் கிட் சியாங் – குவான் எங்குடன் அன்வார் (படம்: நன்றி – லிம் குவான் எங் டுவிட்டர் பக்கம்)

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தான் அமைச்சுப் பொறுப்புகளோ, அரசாங்கப் பொறுப்புகளோ எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் சீர்திருத்தங்களே தனது முதல் கடமையும், நோக்கமும் என்றும் அறிவித்துள்ளார்.

எனவே, துன் மகாதீரின் அமைச்சரவையில் தான் இணையப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“நான் ஏற்கனவே அறிவித்தபடி எந்த அரசாங்கப் பதவிகளிலும் எனக்கு ஆர்வமில்லை. இப்போதுள்ள பதவியே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக தான் நாடாளுமன்ற உறுப்பினரானவுடன் லிம் கிட் சியாங் போன்ற மூத்த நாடாளுமன்ற அனுபவசாலிகளுடன் இணைந்து, நாடாளுமன்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவரப் பாடுபடப் போவதாக அன்வார் இதற்கு முன் அறிவித்திருந்தார்.

“அதே வேளையில் நான் எட்டாவது பிரதமராக அவசரப்படவில்லை. பிரதமராக மகாதீரும் அவரது அமைச்சரவையும் செயல்பட நாம் வாய்ப்பும் இடமும் வழங்க வேண்டும். இதையேதான் இன்று பதவியேற்கும் முன் மகாதீரிடமும் நான் வலியுறுத்தினேன். மகாதீருக்கு கால அவகாசம் போன்ற நெருக்குதல்கள் இன்றி செயல்பட அவருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்” என்றும் அன்வார் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் தனக்கு பிரச்சாரம் செய்ததற்கும் மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அன்வார் மகாதீரின் வயதில் அவருக்கு இருக்கும் உற்சாகமும், ஆற்றலும் அளப்பரியது என்றும் பாராட்டினார்.

“அதனால்தான், இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதும், அந்த மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியை, நான் அழைத்து தெரிவித்தவர்களில் மகாதீரே முதலாமவர்” என்றும் அன்வார் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவராகவோ, அமைச்சரவையில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராகவோ பொறுப்பேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறிய அன்வார், தமது தற்போதைய முதல் பணி நிலைத்தன்மையான அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதற்கு ஆதரவு வழங்குவதுதான் என்றார்.