“எழுத்துரு வடிவமைப்பாளர்,மின்னுட்ப வல்லுநர், முரசு அஞ்சல் ,செல்லினத்தை உருவாக்கியவர் மலேசிய வாழ் தமிழர் முத்து நெடுமாறன் அவர்கள்.
இன்று மாலை தரமணி ,ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ( Roja Muthiah Research Library) அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.
இவர் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அதிகம் சுற்றுவது தெருக்களில் தானாம்.ஏனெனில் அப்போது தான் சுவர் விளம்பர எழுத்துகள், மற்ற விளம்பரப் பலகைகள் ஆகியவற்றைக் காண முடியும் என்பதால்…
பொதுவாக சுவரில் எழுதுபவர்கள் படிப்பறிவற்றவர்கள்..அவர்கள் ஒரு ஓவியம் போல் எழுத்துக்களைப் பதிய வைத்துக் கொண்டு பிரம்மாண்டமாக எழுதுகிறார்கள்.அளவு பெரிதாக இருப்பதால் சிற்சில குறைகள் கண்ணுக்குத் தென்படுவதில்லை!
“ஓர் எழுத்துருவை உருவாக்க எட்டு முதல் ஒன்பது மாதங்கள் தேவைப்படுகிறது.”
“கணினிக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் என்கிற ஒரு சர்ச்சை இருக்கிறது.சமஸ்கிருதமோ, தமிழோ இல்லை. உண்மையில் கணினிக்கு ஏற்றவை இரண்டே எழுத்துகள் தான் அவை 0 மற்றும் 1.”
(ஆனால் கணிணி உள்ளீட்டு மொழியாக இடம் பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் என்பது நாம் அறிந்தது)
ஓர் எழுத்துருவின் வெற்றி அந்த எழுத்துரு பயன்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தைப் படிக்க நம்மை ஈர்ப்பதே. அதன் பின் தொடர்ச்சியாகப் படிக்க வைப்பது படைப்பாளனின் கரங்களில் இருக்கிறது.
தமிழ் மொழியைப் பொருத்த வரை அழகியலை விட உள்ளடக்கத்திற்கே ( content) அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.”
எழுத்துரு பற்றி அவர் பேசும்போது அவர் முகத்தில் தென்பட்ட அந்த இரசனை அவரது ஈடுபாட்டைத் தெள்ளத் தெளிவாகக் காண்பித்தது.
எனக்கு இத்துறை பற்றி அதிகம் தெரியாவிடினும் அவர் எளிமையாகப் புரியும்படி பேசியது சிறப்பு!
அவர் பேசியதில் என்னைக் கவர்ந்த வரி…
“அழகியலை அறிவியல் கொண்டு கணிக்க முடியாது”