சென்னை – அண்மையில் நடிகர் ரஜினிகாந்தைத் தாக்கி திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்தை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மன்றத்திலிருந்து ஒரு சிலரை அவர்களின் நடத்தை காரணமாக மன்றத்திலிருந்து நீக்கினார். அதைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், பணம், பதவியை எதிர்பார்த்து இருப்பவர்கள் இப்போதே மன்றத்தில் இருந்து விலகிவிடுங்கள் என்றும், மன்றத்தின் நடவடிக்கைகள் தனது கவனத்திற்கு வந்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த அறிக்கையை கடுமையாகச் சாடி முரசொலி செய்தி ஒன்றை வெளியிட்டது. முரசொலியின் இந்த செய்தியால் ரஜினி, திமுக வட்டாரங்களில் அதிர்வலைகள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து இரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில், ரஜினிகாந்த் “என்னையும், இரசிகர்களாகிய உங்களையும் ரசிகர்கள் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் செல்லும் பாதை நியாயமானதாக இருக்கட்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் முரசொலி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “ரஜினிகாந்த் குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.
அதே நேரத்தில் ரஜினிகாந்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாடியிருக்கிறார். முரசொலி செய்தி தொடர்பாக அவர் ரஜினிகாந்துடன் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், எந்தத் தரப்புடனும் பகைமை பாராட்டாமல் செயல்படும் எண்ணத்திலேயே ஸ்டாலின் ரஜினியை அழைத்துப் பேசியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.