கோலாலம்பூர் – கடந்த ஜனவரியில் 2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க நிலத்தை பேங்க் நெகாரா எனப்படும் மலேசிய மத்திய வங்கி வாங்கியது தொடர்பிலான முறைகேடுகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் சம்பந்தப்பட்ட 4 அதிகாரிகள் விசாரணைக்கு வழிவிடும் வகையில் விடுமுறையில் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பேங்க் நெகாராவின் ஆளுநர் டான்ஸ்ரீ முகமட் இப்ராகிம் ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் பதவி விலகி விட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேங்க் நெகாரா விடுத்திருக்கும் அறிக்கையில், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுமுறையில் செல்ல இணங்கினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க நிலத்தை பேங்க் நெகாராவுக்கு விற்று, அதன் மூலம் கிடைக்கப்பட்ட பணத்தைக் கொண்டு 1எம்டிபிக்குச் சொந்தமான சில கடன்கள் அடைக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நிலத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட விற்பனைத் தொகை, அந்த நிலப் பரிமாற்றம் மிகவிரைந்து முடிக்கப்பட்ட அவசரம் ஆகிய அம்சங்கள் குறித்தும், நிலப் பரிமாற்றம் முழுமையாக முடிக்கப்படும் முன்னரே அதற்குரிய பணம் மத்திய அரசாங்கத்தின் கணக்குக்கு செலுத்தப்பட்டது குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.