கொழும்பு – இலங்கையில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடியில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அனைத்துலக அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு இணங்கியுள்ளார்.
இந்த அறிவிப்பை சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 11-ஆம் தேதி வரை, நாடாளுமன்றத்தை சிறிசேனா ஒத்திவைத்துள்ள நிலையில், உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியிலும் எழுந்துள்ள கண்டனங்கள் காரணமாக முன்கூட்டியே நாடாளுமன்றத்தை சிறிசேனா கூட்டுகிறார்.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் தனக்கே ஆதரவு இருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத்தில் ரணில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமராகத் தொடர்ந்தால் அதன் பின்னர் அதிபராகத் தொடர மாட்டேன் என சிறிசேனா சூளுரைத்துள்ளார்.
இதன் காரணமாக, இலங்கையில் அரசியல் பரபரப்பு கூடியுள்ளது.