கோலாலம்பூர் – ஒவ்வோர் ஆண்டும் தீபாவளித் திருநாளின் போது, நாட்டின் அரசு சார்பு எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், தீபாவளிக்கென ஒரு சிறப்புக் குறும்படத்தை வித்தியாசமாக எடுத்து தொலைக் காட்சிகளிலும் விளம்பரமாக வெளியிடுவது வழக்கம்.
ஒவ்வோர் ஆண்டும், இந்தியர்களின் வித்தியாசமான வாழ்க்கைச் சூழல்கள், சம்பவங்களைக் கொண்டு எடுக்கப்படும் இந்தக் குறும்படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்.
சுமார் 4 நிமிடங்கள் ஓடும் இந்த ஆண்டுக்கான தீபாவளிக் குறும்படம் தந்தை மகன் இடையிலான பாசப் பிணைப்பையும், குடும்பத்தில் தாயை இழந்த அவர்களின் சோகத்தையும் விவரிக்கிறது.
மோனோகுரோம் (Monochrome) – ஒற்றை வண்ணம் – என்ற தலைப்பில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மகனை மருத்துவம் படிக்கத் தந்தை அனுப்ப, அவனோ புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுவதையும், அதன் காரணமாக தந்தை அதிருப்தி கொள்வதையும், பின்னர் மகனின் புகைப்படத்திறன் மீது பெருமை கொண்டு தந்தை மனம் திருந்துவதும் இந்தக் குறும்படத்தில் காட்சிகளாக விரிகின்றன.
அந்தக் குறும்படத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பின் வழி காணலாம்: