கோலாலம்பூர் : மலேசியாவின் எண்ணெய் வளங்களை நிருவகிக்கும் ஒரே நிறுவனம் பெட்ரோனாஸ். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரிங்கிட் இலாப ஈவு தொகையை அரசாங்கத்துக்கு செலுத்துகிறது.
நாட்டின் அனைத்து எண்ணெய் வளங்களையும் நிருவகிக்கும் ஒரே நிறுவனம் என்பதால் வழக்கமாக பெரும் இலாபத்தை இந்நிறுவனம் ஈட்டி வந்தது. அனைத்துலக அளவில் முதல் 500 நிறுவனங்கள் பட்டியலிலும் அடிக்கடி இடம் பெற்று வந்தது.
எனினும் இந்த முறை இரண்டாவது காலாண்டில் உலகமெங்கும் நிலவிய covid-19 தொடர்பான பொருளாதார சூழ்நிலையில் நஷ்டங்களை அடைந்தது. நஷ்டத்துக்கிடையிலும் 2020 ஆண்டுக்கான இலாப ஈவாக 34 பில்லியன் ரிங்கிட் அரசாங்கத்துக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2019 ஆம் ஆண்டில் 54 பில்லியன் ரிங்கிட் இலாப ஈவை பெட்ரோனாஸ் அரசாங்கத்திற்கு செலுத்தியது.
இந்த ஆண்டில் 24 பில்லியன் அமெரிக்க டாலரை அரசாங்கத்திற்கு செலுத்த முடியும் என பெட்ரோனாஸ் உறுதியளித்திருந்தது. மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 99 பில்லியன் மலேசிய ரிங்கிட்டாகும்.
ஆனால் தற்போது 34 பில்லியன் ரிங்கிட் இலாப ஈவை மட்டுமே பெட்ரோனாஸ் செலுத்துகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 21 பில்லியன் ரிங்கட் நஷ்டத்தைப் பெட்ரோனாஸ் எதிர்நோக்கியது. கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த முறைதான் காலாண்டு நஷ்டத்தை பெட்ரோனாஸ் எதிர்நோக்கியிருக்கிறது.
இந்த விவரங்களை பொருளாதார அமைச்சர் டத்தோஶ்ரீ முஸ்தாபா முகமட் நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் வெளியிட்டார்.
எண்ணெய் விலை வீழ்ச்சியால் இந்த ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் சுமார் 6 பில்லியன் ரிங்கிட் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6-ஆம் தேதி அரசாங்கத்தின் 2021 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.