Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘சர்கார்’ – விஜய்க்காக மட்டும் பார்க்கலாம்! மற்றபடி…?

திரைவிமர்சனம்: ‘சர்கார்’ – விஜய்க்காக மட்டும் பார்க்கலாம்! மற்றபடி…?

1452
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நம்ப முடியாத, நடக்க முடியாத சம்பவங்கள் – பல இடங்களில் லாஜிக் எனப்படும் இயல்புத் தன்மை இல்லாத காட்சிகள் – இந்தக் கதைக்குத்தானா என்னுடையது, உன்னுடையது என்று இத்தனைப் போராட்டம் என்று கேட்கத் தோன்றுகிறது – சர்கார் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது!

படத்தின் கதையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கே.பாக்கியராஜ் முதற்கொண்டு, இந்தக் கதைக்கு உரிமை கொண்டாடிய வருண் இராஜேந்திரன் வரை ஏற்கனவே பலரிடம் கேட்டுவிட்ட கதைதான்.

படம் முழுக்க நிறைவாக அமைந்திருக்கும் ஒரே அம்சம் விஜய் தந்திருக்கும் நடிப்பு – உழைப்பு. அரசியல் வசனங்களை அவருக்கே உரித்தான பாணியில் ஏற்ற இறக்கங்களுடன்  பேசுவது, சண்டைக் காட்சிகளில் எத்தனை பேர் எத்தனை ஆயுதங்களுடன் வந்தாலும் அதகளப்படுத்துவது, ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுத் தந்திருக்கும் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு உடலை நெளித்து, வளைத்து ஆட்டம் போட்டு, பார்க்கும் இரசிகர்களையும் ஆட்டம் போட வைப்பது – இப்படி ஒரு மக்கள் ஹீரோவுக்கான அனைத்தையும் குறையின்றி நிறைவேற்றியிருக்கிறார் விஜய்.

#TamilSchoolmychoice

தனது ஓட்டை கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள் என்பதை விட்டுவிடக் கூடாது என சட்டம், நீதிமன்றம் என அனைத்து முனைகளிலும் விஜய் போராடுவது என்பது அற்புதமானத் தொடக்கம். ஆனால், போகப் போக, விஜய் இரசிகர்களுக்குத் தீனி போட வேண்டும் என்ற காரணத்திற்காக படத்தில் அளவுக்கதிகமான விஷயங்களைத் திகட்டத் திகட்டச் சேர்த்து படத்தை இரசிக்க முடியாமல் செய்துவிட்டார்கள். அரசாங்கத்தின் எல்லா அம்சங்களையும் ஒரேயடியாகப் போட்டுத் தாக்குவது ரொம்பவும் அதிகப்படி.

தொடக்கம் முதலே திரைக்கதையில் நம்ப முடியாத பல ஓட்டைகள், யதார்த்தமின்மை! ஓர் ஓட்டைப் போட நான்கு வெள்ளைக்காரப் பாதுகாவலர்களுடன் புடைசூழ அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் வரும் விஜய், அதன் பின்னர் உண்மையிலேயே பிரச்சனைகள் ஆரம்பிக்கும்போது நான் தனியே பார்த்துக் கொள்கிறேன் என பாதுகாவலர்களைத் திருப்பி அனுப்பி விடுகிறார்.

தமிழ்ப்பட கதாநாயகன் எந்த வேலை பார்ப்பவனாக இருந்தாலும், சண்டை என்று வந்து விட்டால், ஒற்றை ஆளாக நின்று அடிப்பான் என்பது எம்ஜிஆர் காலம் தொட்டு இருந்து வரும் தமிழ் சினிமா இலக்கணம். இதிலும், அனைத்துலக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தாலும், தெருவில் இறங்கி பத்து பேரை அடித்து வீழ்த்துகிறார் விஜய்.

அதே போல தைரியசாலி என்பதைக் காட்ட பல முட்டாள்தனங்களை செய்கிறார் விஜய். ஆளுங்கட்சி ஆட்கள் அவரை நகர் முழுக்க சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்க, இவரோ தனி ஆளாக, ராதாரவியின் கட்சி அலுவலகம் சென்று – அங்கிருக்கும் இருபது பேர்களை  அடித்துத் துவம்சம் செய்கிறார்.

ஆளும் கட்சித் தலைவர் பழ.கருப்பையா நடத்தும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திற்கு சென்று மேடையில் ஏறி வம்புக்கு இழுக்கிறார்.

நாடு முழுக்க 15 நாட்களில் சேவையாளர்களை அடையாளம் கண்டு, தேர்தலில் அவரவர் தொகுதிகளில் தனித் தனி சின்னங்களோடு நிறுத்தி வெற்றி பெற வைக்கிறாராம்.

போதாக் குறைக்கு அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலி என்று கூறிக் கொள்ளும் கட்சித் தலைவர்கள் பழ.கருப்பையாவும், ராதாரவியும், கனடாவிலிருந்து வரலெட்சுமி தொலைபேசி மூலம் கொடுக்கும் உத்தரவுகளுக்கு ஏற்ப இயங்குகிறார்கள்.

இப்படிப் படம் முழுக்க பல ஓட்டைகள், நம்ப முடியாத திருப்பங்கள் அடுத்தடுத்து வருவதால், இரசிக்க முடியவில்லை. குறிப்பாக, தமிழ் நாட்டு இரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆர்ப்பரிக்கும் வசனங்கள் இடம் பெறும் இடங்களில் கூட, மலேசியத் திரையரங்கு இரசிகர்கள் அமைதியாக, சலசலப்பு இல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, படத்தின் கதை வெளிநாட்டு இரசிகர்களுக்கு ஒட்டவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டையே மாற்றியமைக்கப் போராடும் விஜய் – நிஜவாழ்க்கையிலும், நான்தான் அடுத்த தலைவர் என்பதுபோல் பிரகடனப்படுத்திக் கொள்ளும் விஜய் – கதைக்கு சம்பந்தமில்லாமல், அடிக்கடி சிகரெட் புகைப்பதும், மண்பானையில் கள் குடித்துவிட்டு ஆட்டம் போடுவதும் – என்ன கலாச்சாரமோ தெரியவில்லை! முருகதாஸ் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உற்சாகப் பாடல்கள் 

விஜய் தவிர, படத்தில் கவரும் இன்னொரு அம்சம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. விஜய்க்காக ஒலிக்கும் பின்னணி இசை அவ்வளவாக மனதில் நிலைக்கவில்லை என்றாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகம்.

ஒருவிரல் புரட்சியே என்ற அரசியல் போராட்டப் பாடலாகட்டும், மொழி புரியாத வடசென்னை இரக சிம்டாங்காரன் பாடலாகட்டும், ரஹ்மான் அனுபவித்துத் தந்திருக்கிறார். ஒருவிரல் புரட்சியே பாடலை அவரே பாடியும் இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷூக்கு அழகுப் பதுமை வேடம். விஜய் கூடவே வந்து போகிறார். அவ்வளவுதான்.

விஜய் வழங்கும் வழக்கமான நகைச்சுவை இந்தப் படத்தில் இல்லாதது இரசிகர்களுக்குக் குறை. அதைக் கொஞ்சம் தீர்த்து வைக்கிறார்கள், யோகி பாபுவும், ராதா ரவியும்! தொலைக்காட்சி விவாதத்தில் அதிரடியாக நேரில் வந்து கலந்து கொள்ளும் விஜய், தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்க, அதைத் தொடர்ந்து “தம்பி வேலையை விட்டுவிட்டதால ரொம்ப பிரீயா இருக்காரு. நமக்கு நிறைய வேலை இருக்கு” என ராதா ரவி கிளம்புவது திரையரங்கையே அதிர வைக்கிறது.

படத்தின் முக்கால் வாசிப் பகுதியில் வரலெட்சுமி சென்னைக்கு வந்து இறங்கியவுடன் விஜய்க்கு எதிராக வகுக்கும் அதிரடி வியூகங்கள்தான் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.

மற்றபடி, ஷங்கரின் முதல்வன் படத்தைப் போல, நடப்பு காலத்திற்கேற்ற அற்புதமான அரசியல் செய்திகளோடு வந்து அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டிய அம்சங்கள் இருந்தும், விஜய் இரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் படம் எடுத்து, கோட்டை விட்டு விட்டார்கள்!

-இரா.முத்தரசன்