Home நாடு “இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கு – என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” – இராமசாமி கோரிக்கை

“இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கு – என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” – இராமசாமி கோரிக்கை

1258
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் புதன்கிழமை நவம்பர் 14-ஆம் தேதி தேசியப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கத் தானும் பொருத்தமானவன் என்பதால், எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசியப் பல்கலைக் கழகத்தின் கருத்தரங்கிற்கு முன்னதாக வைத்திருந்த தலைப்பு “தீபகற்ப மலாயாவுக்கு இந்திய சமுதாயத்தினரின் வருகையும் அதுகுறித்த பிரச்சனைகளும்” என்பதாக இருந்தது (Polemik Kehadiran Masyarakat India di Semenanjung Tanah Melayu: Migrasi atau Imigran?). எனினும் ஒரு குறிப்பிட்ட இனம் பற்றிய பிரச்சனையைப் பேசுவதாக இந்தக் கருத்தரங்கம் இருக்கிறது என மீரா எனப்படும் சிறுபான்மையினர் உரிமைகள் கட்சி கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து இந்தக் கருத்தரங்கின் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. “மலாய் தீவுகளில் இனங்களின் குடியேற்றமும் நிலைப்பாடும்” என்ற பொருளில் இந்தக் கருத்தரங்கம் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது (Kependudukan dan Pergerakan Etnik di Kepulauan Melayu).

#TamilSchoolmychoice

“எனினும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுவதாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் உரையாளர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள். நான் தேசியப் பல்கலைக் கழகத்தில் ஏற்கனவே விரிவுரையாளராக இருந்தவன் என்ற முறையிலும் இந்தியர் குடியேற்றம் தொடர்பான இதுபோன்ற கருத்தரங்குகளை ஏற்கனவே நடத்தியிருப்பவன் என்ற முறையிலும் (பினாங்கு) குவார் கெப்பா  என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவன் என்ற முறையிலும் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள நானும் தகுதியானவன்தான்” என பிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இராமசாமி கூறியிருக்கிறார்.

“இது போன்ற கருத்தரங்குகளும் விவாதங்களும் வரவேற்கப்பட வேண்டும். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தரங்குகள் தடுக்கப்படக் கூடாது. ஆனால் எனது குற்றச்சாட்டு என்னவென்றால் இந்தக் கருத்தரங்கின் பேச்சாளர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக  இருக்கிறார்கள். பல இனங்களும் கலந்த உரையாளர்களைக் கொண்டு ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்தியிருக்கக் கூடாது என்பதுதான் எனது கேள்வி” என்றும் இராமசாமி கேள்வி எழுப்பினார்.

“இந்தியர்களின் குடியேற்றம் குறித்த கருத்தரங்கம் என்பதால் இதில் இந்திய ஆய்வாளர்களையும் உரையாளர்களாகச் சேர்த்திருக்க வேண்டும். இந்தக் கருத்தரங்கின் மையக் கருப்பொருளான ‘இந்தியர்களின் மலாயாவுக்கான குடியேற்றம்’ என்பது எப்போதுமே எனது இதயத்திற்கு நெருக்கமான ஒரு விவகாரமாகும். இந்தத் தலைப்பில் நான் எப்போதுமே ஆர்வம் காட்டி வந்திருக்கிறேன். ஆனால், இந்தக் கருத்தரங்கின் முக்கிய உரையாளர்கள் பட்டியலில் இந்தியர்கள் யாருமே இடம் பெறவில்லை. எனவே, இந்தக் கருத்தரங்கில் உரையாளர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொண்டால் எனது சிற்றறிவுக்கு எட்டிய சில விஷயங்களை என்னால் கூற முடியும்” என்றும் இராமசாமி கூறியிருக்கிறார்.

“கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி பினாங்கில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷினி கனகசுந்தரம் என்ற ஆய்வாளர் ஆற்றிய உரையில் தமிழ் பாரம்பரியம் குறித்தும் தமிழர்களின் மலாயாவுக்கான குடியேற்றம் குறித்தும் உரையாற்றியிருந்தார். இந்த உரை குறித்து உள்நாட்டு மலாய் நாளிதழ் ஒன்று அளவுக்கதிகமாக குறைகூறி மலாய் குடியேற்றத்தையே சுபாஷினியின் உரை கேள்விக் குறியாக்கியிருக்கிறது என்று எழுதியிருந்தது. ஒருக்கால் அதற்கு பதிலடியாக இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்” என்றும் இராமசாமி விளக்கம் தந்துள்ளார்.