Home நாடு பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை

பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை

1809
0
SHARE
Ad
பூலோ அக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசிலன் விருது பெறுகிறார்

ஈப்போ – பேராக் மாநிலத்தின் பாரிட் வட்டாரத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் இணைப்பாட நனிச்சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்று இரண்டாவது பரிசை வாகை சூடியது.

தேசிய நிலையில் நாடு தழுவிய அளவில் 3071 பள்ளிகளிடையே நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி இரண்டாவது பரிசு பெற்றிருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இப்பள்ளி 2018-ஆம் ஆண்டு முழுவதும் மாநிலப் போட்டிகள், தேசிய போட்டிகள், அனைத்துலக நிலைப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று மிகச் சிறந்த வெற்றிகளையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ளது.  இதன் அடிப்படையில் இப்பள்ளிக்கு மதிப்பீட்டுக் குழுவொன்று கடந்த மாதம் வருகை மேற்கொண்டு ஆய்வு நடத்தியது. இதே போன்ற ஆய்வு நாடு தழுவிய அளவில் குறைந்த மாணவர் பயிலும் 3071 பள்ளிகளில் நடைபெற்றது. அந்த மதிப்பீட்டின் இறுதியில் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த சொங் மிங் சீனப்பள்ளி முதல் பரிசை வென்றது. பேராக் மாநிலத்தைச் சேர்ந்த பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2-ஆம் பரிசை வென்றது.

#TamilSchoolmychoice

24 மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் மனஹரன் தலைமைத்துவத்திலும் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசீலனின் அருமையான முயற்சியாலும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பினாலும் இந்தப் பள்ளி இணைப்பாடத் துறையில் பேரா மாநிலத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாகப் பெயர் பொறித்துள்ளது. ஒரு தமிழ்ப்பள்ளி இந்த அளவுக்குச் சிறந்து விளங்குவது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளதோடு பாராட்டையும் பெற்றுள்ளது என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 9-ஆம் தேதி சனிக்கிழமை நெகிரி செம்பிலான், பண்டார் என்ஸ்டேக் துங்கு குர்சியா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் இப்பள்ளியின் சார்பில் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசிலன் பள்ளிக்கான விருதினைப் பெற்றுக்கொண்டார்.

குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளிலும் அதன் தரம் மிகச் சிறப்பான நிலைக்கு உயர்ந்து வருவதை இந்த வெற்றி பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.