ரெம்பாவ் – கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 9-ஆம் தேதி நெகிரி செம்பிலான் ரெம்பாவ் சதுக்கத்தில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் தம்பதியர் கலந்து சிறப்பித்தனர். அவர்களுடன் ரெம்பாவ் வட்டார உண்டாங் லுவாக் (வட்டாரத் தலைவர்) டத்தோ லீலா மகாராஜா டத்தோ ஹாஜி முகமட் ஷரிப் ஹாஜி ஒத்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அனைத்து இனங்களையும் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளும் முன்னர் பிரதமர் தம்பதியர் அந்த வட்டாரத்திலுள்ள விவேகானந்தா இல்லத்திற்கு வேதமூர்த்தியுடன் வருகை தந்தனர். இந்த இல்லத்தில் 5 வயது முதல் 17 வயது வரையிலான, 45 வசதி குறைந்த பிள்ளைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
இந்த விவேகானந்தா இல்லம் வேதமூர்த்தி ஹிண்ட்ராப் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டுவதற்கு முன்னரே தனது நண்பர்களுடன் இணைந்து தொடக்கிய சமூக சேவை இல்லமாகும்.
பிரதமர் தம்பதியரை இந்த வசதி குறைந்த குழந்தைகள் வரிசையில் நின்று வரவேற்றனர். பின்னர் பிரதமர் தம்பதியர் அந்தக் குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொருட்களை வழங்கினர்.
2006-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விவேகானந்தா இல்லத்தை, ரமேஷ் பட்டேல் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். தனித்து வாழும் பெற்றோர்களைக் கொண்டவர்கள், வன்முறைப் பாதிப்புக்கு இலக்கான குழந்தைகள் போன்றவர்களை இந்த இல்லம் பராமரித்து வருகிறது.
விவேகானந்தா இளைஞர் இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர்கள், ரமேஷ் பட்டேல், மற்றும் இந்த இல்லம் அமைந்துள்ள ஆலயத்தின் தலைவர் வீரப்பன் ஆகியோருடன் இணைந்து வேதமூர்த்தி இந்த விவேகானந்தா இல்லத்தைத் தோற்றுவித்தார்.
விவேகானந்தர் இல்லத்திற்கான வருகையை முடித்துக் கொண்டு ரெம்பாவ் சதுக்கத்திற்கு வந்த துன் மகாதீர் – சித்தி ஹஸ்மா தம்பதியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் வேதமூர்த்தியோடு அவரது துணைவியார் நாகேஸ்வரி கருப்பனும் கலந்து கொண்டார். வருகையாளர்களுக்கு இந்திய பாரம்பரிய இன்னிசைக் கச்சேரியுடனான வரவேற்பு நல்கப்பட்டது.
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றிய வேதமூர்த்தி, மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவனித்துத் தீர்த்து வைக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
“பல்வேறு சமூகப் பிரச்சனைகளோடு போராடி வரும் இந்திய சமுதாயத்தினருக்கு இந்தத் தீபாவளித் திருநாள் ஒளி, பிரகாசமான எதிர்காலத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தப் புதிய நம்பிக்கையை நம்பிக்கைக் கூட்டணியின் உறுதி மொழிகள் தோற்றுவித்திருக்கின்றன. இந்திய சமுதாயம் மேலும் மேம்பாடு காண ஒரு புதிய தொடக்கம் இதுவாகும். இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவுக்கு பாடுபடும்” என்றும் வேதமூர்த்தி தனதுரையில் வலியுறுத்தினார்.
“நான் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், துன் மகாதீர் அவர்களால் அமைச்சராக நியமிக்கப்பட்டேன். இதன் மூலம் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மகாதீர் கடப்பாடு கொண்டுள்ளார் என்பது புலனாகிறது.
தேசிய ஒற்றுமை மற்றும் சமூகநலத் துறைக்கான அமைச்சருமான வேதமூர்த்தி, தனதுரையில் மலேசியர்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். “வெவ்வேறு இனம், மதம் பின்னணிகளைக் கொண்ட மலேசியர்கள் கடந்த காலங்களில் எப்போதுமே ஒருவருக்கொருவர் தோள்கொடுத்தும், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த ஒற்றுமை உணர்வு எதிர்கால சந்ததியருக்கிடையிலும் தொடரவேண்டும் என்பதோடு வலுப்படவும் வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.