Home வணிகம்/தொழில் நுட்பம் பிராமண எதிர்ப்பு சர்ச்சையில் சிக்கிய டுவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி

பிராமண எதிர்ப்பு சர்ச்சையில் சிக்கிய டுவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி

966
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவுக்கு வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கும் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டோர்சி, பதாகை ஒன்றைத் தூக்கிப் பிடித்திருப்பது போன்ற ஒரு  புகைப்படம் வெளியாகி, அதன் மூலம் அந்த சாதாரண செயல் ஒன்றால், இந்தியா முழுவதும் சர்ச்சையையும், சமூக ஊடகங்களில் கடுமையான வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர் தூக்கிப் பிடித்த பதாகையில் “பிராமணர்களின் ஆதிக்கத்தை நொறுக்குவோம்”  என்ற பொருளிலான smash Brahminical patriarchy என்ற ஆங்கில வாசகம் இடம் பெற்றிருந்ததாகும்.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு சமூகத்திற்கு எதிரான துவேஷத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் என இந்தியாவின் பல தரப்புகள் அவரைக் கடுமையாகச் சாடியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

ஜேக் டோர்சி தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) சர்ச்சைக்குரிய அந்தப் புகைப்படம் பத்திரிக்கையாளர் ஒருவரின் டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் கண்டது. டுவிட்டர் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் பல்வேறு தரப்பட்ட குழுக்களைச் சந்தித்து வந்த டோர்சியை, தலித் இயக்கப் போராட்டக் குழுவினர் சிலர் சந்தித்தபோது, அவர்களில் ஒருவர் அந்தப் பதாகையை டோர்சியிடம் கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இதன்மூலம் பல இந்தியர்கள் டோர்சியின் செயலால் தாங்கள் காயமடைந்திருப்பதாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் “அந்தப் பதாகையில் பிரதிபலிக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் டுவிட்டரின் பார்வையோ, கொள்கையோ அல்ல” என டுவிட்டர் அறிக்கை ஒன்றின் வழி வலியுறுத்தியது.

தங்களின் தலைமைச் செயல் அதிகாரியின் இந்தியாவுக்கான பயன்மிக்க, களம் அறியும்  பயணத்தை இந்தப் புகைப்படம் திசை திருப்பிவிட்டது என்றும் டுவிட்டர் வருத்தம் தெரிவித்துள்ளது.