கோலாலம்பூர் – “மூசாங் கிங்” என்பது மலேசிய டுரியான் இரகங்களில் உயர்வானதும் மிகச் சுவையானதும் ஆகும். மலேசியாவில் கிடைக்கும் அந்த டுரியான் பழங்கள் தற்போது சீனாவில் மிகப் பிரபலமடைந்திருப்பதோடு, அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
சீனாவின் மிகப் பெரிய இணைய விற்பனை நிறுவனமான அலிபாபா தனது துணை நிறுவனமான டி மால் (TMall) நிறுவனம் மூலம் மலேசியாவின் பெஹோ பிரெஷ் நிறுவனத்தோடு (BEHO Fresh Sdn Bhd) இணைந்து பதனப்படுத்தப்பட்ட டுரியான் பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து இணையம் வழியாகவும், அலிபாபா நிறுவனத்தின் நேரடி சில்லறை வணிக மையங்களின் மூலமாகவும் விற்பனை செய்யவிருக்கிறது.
இந்தப் புதிய வணிக முயற்சிகள் இணைய விற்பனையின் வல்லமையைக் காட்டுவதாக இருக்கும் என்பதோடு, மலேசிய விவசாய சந்தைக்கு குறிப்பாக டுரியான் பழ உற்பத்தியில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றும் கருதப்படுகிறது.
அதே சமயம் டுரியான் உற்பத்தியாளர்கள் வெளிநாட்டுக்கு அதிக விலையில் விற்பனை செய்யவே முற்படுவார்கள் என்றும் உள்நாட்டில் மூசாங் கிங் இரக டுரியான்களின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.