Home நாடு சீபீல்ட் ஆலயத்தைக் காப்பாற்ற கார்த்திகை தீபம் ஏந்தி அமைதிப் பேரணி

சீபீல்ட் ஆலயத்தைக் காப்பாற்ற கார்த்திகை தீபம் ஏந்தி அமைதிப் பேரணி

1205
0
SHARE
Ad

சுபாங் – 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுபாங் சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்றும் இறுதிக் கட்ட முயற்சிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், அந்த ஆலயத்தை அந்த இடத்திலேயே நிர்மாணிக்கப் போராடும் நடவடிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சுவாமி இராமாஜி நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கார்த்திகை தீபம் ஏந்தி அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

சீ பீல்ட் ஆலய விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும், அந்த ஆலயத்தை மீண்டும் அங்கேயே நிர்மாணிக்க உதவி புரிய வேண்டும் என்றும் பிரதமர் துன் மகாதீருக்கு கோரிக்கை மனு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின்போது துன் மகாதீரின் உதவியாளரிடம் அந்தக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று சனிக்கிழமை காலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சீ பீல்ட் ஆலயம் குறித்த அண்மையத் தகவல்களை வெளியிட்ட சுவாமி இராமாஜி, நாளை நடைபெறும் அமைதிப் பேரணி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

பல்வேறு அரசாங்கத் தரப்புகளைச் சந்தித்து, சீ பீல்ட் ஆலயத்தை அதன் பழைய இடத்திலேயே நிலை நிறுத்துவதற்கான காரணங்களை வலியுறுத்தி இருப்பதாகவும், பிரதமரிடமும் கோரிக்கை மனு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறிய சுவாமி இராமாஜி இறுதிக் கட்டப் போராட்டமாக மக்களைச் சந்தித்து விளக்கங்களை வழங்கி அவர்களையும் போராட்டத்தில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அமைதிப் பேரணி பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வளாகத்தில் உள்ள நீருற்றுப் பகுதியில் தொடங்கும். அங்கு சில உரைகளுக்குப் பின்னர் பொதுமக்கள் அனைவரும் கார்த்திகை தீபம் ஏந்தி அங்கிருந்து அமைதிப் பேரணியாக சென்று, பிரிக்பீல்ஸ் பூக்கடைகளின் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் அந்த கார்த்திகை அகல் விளக்குகள் வைக்கப்பட்டு, தொடர்ந்து பிரார்த்தனைகள் நடைபெறும்.

நாளை நடைபெறும் அமைதிப் பேரணி 11-வது இந்து எழுச்சி தினமாகவும் நினைவு கூரப்படுகிறது.

கடந்த 2007-ஆம் ஆண்டு இதே நவம்பர் 25-ஆம் தேதிதான் ஹிண்ட்ராப் போராட்டம் கோலாலம்பூரின் வீதிகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.