Home நாடு பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – தூதரகத்தில் இந்து இயக்கங்கள் ஆட்சேப மனு

பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – தூதரகத்தில் இந்து இயக்கங்கள் ஆட்சேப மனு

747
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையில் பாகிஸ்தானில் ஓர் இந்து ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் மலேசியாவில் உள்ள இந்து இயக்கங்களின் சார்பில் ஆட்சேப மனு ஒன்று நேற்று வியாழக்கிழமை காலையில் கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வழங்கப்பட்டது.

சுவாமி இராமாஜி தலைமையில் சுமார் 10 பிரதிநிதிகள் கூடி, 20-க்கும் மேற்பட்ட இந்து இயக்கங்களின் சார்பில் இந்த மனுவை பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரிகளிடத்தில் சமர்ப்பித்தனர்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், நடந்த சம்பவம் குறித்த விளக்கங்களை அளித்தனர் என்றும், சம்பவம் தொடர்பான பதில் நடவடிக்கைகளை பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார் என்றும் தெரிவித்ததாக ஆட்சேப மனு அளிக்கச் சென்ற பிரதிநிதிகள் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 11) பாகிஸ்தான் சிறுபான்மை இனத்தினருக்கான நாளை சிறப்பாகக் கடைப்பிடித்துக் கொண்டாடியதாகவும் தூதரக அதிகாரிகள் ஆட்சேப மனு அளிக்கச் சென்ற பிரதிநிதிகளிடம் தெரிவித்திருக்கின்றனர்.

பாகிஸ்தானில் இந்து ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரம்

கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள போங் என்ற நகரில் உள்ள அந்த இந்து ஆலயம் சில நாட்களுக்கு முன்னர் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டது.

8 வயதுடைய இந்து சிறுவன் ஒருவன், இஸ்லாமியப் புனித வாசகங்கள் அடங்கிய ஜமுக்காளம் ஒன்றின் மீது சிறுநீர் கழித்ததாகத் தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த முஸ்லீம் குழுவினர் அந்த இந்து ஆலயத்தை உடைத்துச் சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையில், உடைக்கப்பட்ட அந்த ஆலயம் தற்போது மீண்டும் சீர்படுத்தப்பட்டு, மறுநிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூடிய விரைவில் அந்த ஆலயத்தில் வழிபாடுகள் நடத்த உள்ளூர் இந்துக்களிடம் அந்த ஆலயம் ஒப்படைக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் அரசாங்க நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆலயத்தைச் சேதப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சேதகங்களுக்கான இழப்பீடுகளை அவர்கள் செலுத்த வேண்டியதிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இந்து ஆலயத்திற்கான பாதுகாப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும், அந்தப் பகுதியில் பதட்டம் நீடிப்பதாகவும் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்த சிறுவனின் குடும்பத்தினர் அச்சத்தின் காரணமாக தலைமறைவாகியிருக்கின்றனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.