Home இந்தியா வைகோ – ஸ்டாலின் சந்திப்பும் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டமும்

வைகோ – ஸ்டாலின் சந்திப்பும் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டமும்

1108
0
SHARE
Ad

சென்னை – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் அடிக்கடி சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையக் காலமாக மதிமுக தலைவர் வைகோ பகிரங்கமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வரும் நிலையில் அண்மையில், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறி சில அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் துரைமுருகன் கூட்டணி இன்னும் அமையவில்லை, மாறாக ஒத்த கருத்துடைய தோழமைக் கட்சிகள்தான் இருக்கிறார்கள் எனக் கொளுத்திப் போட்டார். இது நேரடியாக மதிமுகவையும், விடுதலைச் சிறுத்தைகளையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்தது.திருமாவளவனும் கஜா புயல் சேதங்களைப் பார்வையிடச் சென்ற இடத்தில் டிடிவி தினகரனைச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டதும், திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சலசலப்புகளைத் தொடர்ந்து திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அதைத் தொடர்ந்து வைகோவும் கடந்த புதன்கிழமையன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துக் கூட்டணியில் இருப்பதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், கர்நாடக அரசு கட்ட முனைந்துள்ள மேகதாது அணைக்கு எதிராகவும், அதற்கு அனுமதி அளித்துள்ள பாஜக அரசுக்கு எதிராகவும் எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடைபெறும் என நேற்று புதன்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

கஜா புயல் சேதங்களைப் பார்வையிடச் சென்ற தினகரனும், திருமாவளவனும் சந்தித்துக் கொண்டபோது…

இன்னொரு திருப்பமாக, எதிர்வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்றும் எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

திமுக அமைக்கப்போகும் கூட்டணிக்கு முன்னோடியாக கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகிறார் என்றும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

வியாழக்கிழமை திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்…