ஷா ஆலாம் – அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையான தீர்வு ஒன்று காணப்படாமல், சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயம் தற்போதிருக்கும் இடத்தில் இருந்து அகற்றப்படாது என சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று உத்தரவாதம் வழங்கினார்.
ஆலயத்தை இடம் மாற்றும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையில் நடுவராக இருந்து செயல்படவும் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமிருடின் கூறினார்.
இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த உத்தரவாதங்களை வழங்கிய அமிருடின், தாங்கள் காணப் போகும் தீர்வுக்காக நீதிமன்றத்தின் முடிவையும் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன, நீர், நிலம் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் ஆகியோரும் இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
“எனினும் அந்த வட்டாரத்தில் அமைதி காக்கும் நோக்கில், தீர்வு ஒன்று காணப்படும் வரையில் நில மேம்பாட்டாளரும், ஆலய தரப்பினரும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்க்க வேண்டும். அதுவரையில் கூட்டங்கள் கூடுவதோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதோ தவிர்க்கப்பட வேண்டும்” என்றும் அமிருடின் தெரிவித்தார்.
ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கமே கையகப்படுத்த மகாதீர் உத்தரவிட்டிருக்கிறார் என நேற்று வெளியான தகவல்கள் தெரிவித்தன.
நேற்று புதன்கிழமை வேதமூர்த்தியும், குலசேகரனும் இணைந்து மகாதீரைச் சந்தித்து விளக்கமளித்திருந்தனர்.
“இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், விரைவில் நல்ல செய்தி வரும்” என நேற்று குலசேகரன் கூறியிருந்தார்.