நவீன சினிமா தொழில்நுட்பம், ஆங்கிலப் படங்களுக்கு நிகரான காட்சியமைப்பு, இதுவரை இந்தியப் படங்களில் கையாளப்படாத கதைக்கரு, விறுவிறுப்பான திரைக்கதை, சிட்டி என்ற ரஜினி எந்திரனில் கலக்கிய கதாபாத்திரத்தை திரையில் உலவ விட்டபின் ஏற்படும் கலகலப்பு, அடுத்தடுத்து தொழில் நுட்பங்களைக் கொண்டே புதிய புதிய அம்சங்களை – கதாபாத்திரங்களை உலவவிடும் இலாவகம் – என அனைத்தையும் ஒருசேர இணைத்து அதகளப்படுத்தியிருக்கிறார் ஷங்கர்.
அதனூடே, இன்றைக்கு மக்களுக்கு தேவையான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்திருப்பதும், மனிதர்களோடு இந்த உலகத்தில் விலங்குகளுக்கும் ஓரிடம் உண்டு என்பதை உணரவைத்திருப்பதும் ஷங்கரின் மற்ற சிறப்புகள்.
மூன்றாண்டுகள் அவர் வழங்கியிருக்கும் உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவரது உழைப்புக்குத் தோள் கொடுப்பவர்கள் ரஜினிகாந்தும், அக்சய் குமாரும்! விஞ்ஞானி வசீகரனாகவும், ரோபோ என்ற மனித இயந்திர வடிவங்களிலும் தனக்கே உரிய நடிப்பால் கலகலக்க வைக்கிறார் ரஜினி. புதுமையான முறையில் அவரது பெயர் திரையில் தோன்றும்போதே இரசிகர்களின் கைத்தட்டல்கள் தொடங்கி விடுகின்றன. தொடர்ந்து தான் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவரது சேட்டைகள், இடையிடையே அடிக்கும் பஞ்ச் வசனங்கள், திரையரங்கையே அதிர வைக்கின்றன.
அக்சய்குமாரின் சிறந்த நடிப்பு
வயதான கதாபாத்திரத்தில் பறவைகள் ஆராய்ச்சியாளராக சிறந்த நடிப்பை வழங்கியிருக்கும் அக்சய்குமார் தொடர்ந்து வில்லத்தனமான இயந்திரப் பறவையாக ரஜினிக்கு சவால் விடும் வகையில் மோதியிருக்கிறார். ஒப்பனை, பாரமான ஆடை அணிகலன்கள் என அவரும் நிறைவான உழைப்பைத் தந்திருக்கிறார்.
இரண்டே பாடல்கள்! அதிலும் ஒரு பாடல் பின்னணியில் மட்டுமே ஒலிக்கிறது. மற்றொரு பாடல் இறுதிக் காட்சியில் வருகிறது. அந்தப் பாடல் முடிந்ததும், படம் முடிந்து விட்டதோ என்று வெளியேறி விடாதீர்கள். அதற்குப் பிறகு ரஜினியின் கலகலப்பான சில நிமிடக் காட்சிகள் வருகின்றன.
படத்தின் பலவீனங்கள்
ஏறத்தாழ 20 நிமிடங்கள் படம் இடையிடையே தொய்வடைகிறது. செல்பேசிகள் வானத்தை நோக்கி அடிக்கடி இழுக்கப்படுவதும், பிரம்மாண்டமான பறவை வானத்தை அடைத்துக் கொண்டு அடிக்கடி பறக்கும் காட்சிகளும் என திரும்பத் திரும்ப வருவது சற்றே போரடிக்க வைக்கிறது.
எனினும், பிரம்மாண்டமான காட்சிகளின் பிரமிப்புகளால் இதுபோன்ற கதையின் ஓட்டை ஒடிசல்களை, பலவீனங்களை நாம் மறந்து விடுகிறோம்.
தொழில் நுட்ப பங்களிப்புகள் அனைத்தும் அற்புதம். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான இசை, முத்துராஜின் கலைவடிவம், அரங்க நிர்மாணிப்புகள் என அனைத்து அம்சங்களுமே அழகாகக் கைகோர்த்து ஷங்கரின் படைப்புக்கு மேலும் மெருகூட்டியிருக்கின்றனர்.
அதே போல, நவீன விஞ்ஞானம், தொழில் நுட்பம் என்ற வகையில் ‘2.0’ திரைப்படத்தை இந்தியத் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் இன்னொரு தளத்திற்குக் கொண்டு சென்று – பாகுபலிக்கு நிகரான அனுபவத்தை இன்னொரு கோணத்தில் தருகிறார் ஷங்கர்.
வசூலிலும் பாகுபலியை 2.0 முறியடிக்குமா என்பதைக் காணக் காத்திருக்கிறது, இந்தியத் திரையுலகம்!
-இரா.முத்தரசன்