Home Slider பெர்காசாவினால் தே.மு. வாக்குகளை இழக்கும் – வேள்பாரி எச்சரிக்கை

பெர்காசாவினால் தே.மு. வாக்குகளை இழக்கும் – வேள்பாரி எச்சரிக்கை

767
0
SHARE
Ad

Vel-Paari-Sliderஜனவரி 19 –  “பெர்காசா இயக்கத்தின் தலைவர் இப்ராகிம் அலி தொடர்ந்து மதவிரோதத்தையும் மற்றும் இனங்களுக்கிடையில் பதட்டத்தையும் சர்ச்சைகளையும் தூண்டி வருகின்றார். முஸ்லிம் அல்லாதவர்கள் மீது இனவெறித் தாக்குதலுக்கும் தூண்டி வருகின்றார். இவர்மீது அரசாங்கம் குற்றவியல் (கிரிமினல்) வழக்கு தொடுக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க முடியும்” என ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும், ம.இ.காவின் வியூக இயக்குநருமான சா. வேள்பாரி (படம்)  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெர்கெசா மீதிலான தங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் தேசிய முன்னணியும் அதன் தலைமைத்துவமும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் வேள்பாரி கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

“இப்ராகிம் அலி தேசிய முன்னணி கட்சியில் எந்த ஓர் அங்கமும் வகிக்கவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் முன்னிலையில் அவர் பதட்டத்தை தூண்டிவிடும் வண்ணம் ஏதேதோ பேசுகின்றார். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இது தேசிய முன்னணியின் தோற்றத்திற்கு நல்லதாகப் படவில்லை” என்றும் வேள்பாரி கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக இப்ராகிம் அலி “அல்லா” என்ற வார்த்தையைக் கொண்டிருக்கும் எல்லா பைபிள்களையும் முஸ்லிம்கள் கைப்பற்றி எரிக்கவேண்டும் என்ற அறைகூவல் விடுத்திருந்தார்.

பினாங்கில் நடைபெற்ற பெர்கெசா மாநாட்டில் இப்ராகிம் அலி இந்த அறைகூவலை விடுத்திருந்தார். இந்த மாநாட்டிற்கு துன் மகாதீர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய வேள்பாரி தேசிய முன்னணி பெர்காசா மீது உடனடி தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் தேசிய முன்னணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்று கூறினார்.

வேள்பாரி துன் மகாதீருக்கு ஓர் ஆலோசனையை வழங்கினார். “உங்களின் பதவி ஓய்வை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள். மாறாக உங்களின் நடவடிக்கையால் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு தர்ம சங்கடத்தையும் சோதனைகளையும் ஏற்படுத்தாதீர்கள். தேசிய முன்னணி அரசாங்கத்தின் கடந்த கால தவறுகளை சரிப்படுத்த நஜிப் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றார். அவருக்கு இடையூறாகவும் தேசிய முன்னணிக்கு பாதகமாகவும் செயல்படாதீர்கள்” என்பதுதான் வேள்பாரி துன் மகாதீருக்கு வழங்கிய ஆலோசனையாகும்.