காஜாங் – உடல் முழுக்கக் காயங்களுடன் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 5) இரவு 10.30 மணியளவில் செர்டாங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட யாகவ் சர்மா என்ற 10 வயது இந்தியச் சிறுவன் சிகிச்சையின்போது மரணமடைந்ததைத் தொடர்ந்து அவனது தந்தை காவல் துறையினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
செமினி வட்டாரத்திலுள்ள ஆலயம் ஒன்றின் பூசாரி என நம்பப்படும் அந்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி 7 நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படும் உத்தரவைக் காவல் துறை பெற்றது.
காஜாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 43 வயதான அந்த நபருக்கு எதிரான தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்துப் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காஜாங் வட்டாரக் காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் (ஏசிபி) அகமட் சாபிர் முகமட் யூசோப், அந்தச் சிறுவனின் பிரேத பரிசோதனைகளைக் கொண்டு பார்க்கும்போது, உடல் முழுக்க காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மூன்று சகோதர, சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான அந்தச் சிறுவன் தந்தையின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும், அவனது தாய் சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டதாகவும் அகமட் சாபிர் மேலும் தெரிவித்தார்.