Home வணிகம்/தொழில் நுட்பம் ஜேக்கி சான்னின் பரந்து விரிந்த வணிக அமைப்பு

ஜேக்கி சான்னின் பரந்து விரிந்த வணிக அமைப்பு

926
0
SHARE
Ad

ஹாங்காங் – சிறுவயதில் ஒரு சாதாரண சண்டைக்காட்சிக் கலைஞராக திரைப்படங்களில் அறிமுகமாகி, பின்னர் சீனத் தற்காப்புக் கலை கற்றுத் தேறிய கதாநாயகனாக சீனப்படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் ஜேக்கி சான். அவரது திறமைகள் ஹாலிவுட்டுக்கும் அவரைக் கொண்டு சென்றன. அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார் ஜேக்கி சான்.

திரைப்பட நடிகராக இருந்தாலும் அவருக்குப் பின்புலத்தில் பிரம்மாண்டமான வணிகத் தொடர்புகள் இருக்கின்றன. அதன்மூலம் பெரும் பணக்கார நடிகர்களில் ஒருவராக அவர் உயர்ந்திருக்கிறார்.

2010 முதல் 2018 வரை சுமார் 293 மில்லியன் அமெரிக்க டாலரை அவர் வருமானமாக ஈட்டியிருக்கிறார் என மதிப்பிடுகிறது போர்ப்ஸ் வணிக ஊடகம்.

#TamilSchoolmychoice

இதுவரையில் 110 படங்களில் நடித்திருக்கும் ஜேக்கி சான் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். ஹாங்காங்கில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பல நிறுவனங்களில் கணிசமானப் பங்குகளை வைத்திருக்கும் அவர் சில பங்குச் சந்தைகளின் இயக்குநர் வாரியத்திலும் இடம் பெற்றிருக்கிறார். சீனாவின் பல கோடீஸ்வர வணிகர்களோடு வணிகத் தொடர்புகளையும் அவர் கொண்டிருக்கிறார்.

மலேசிய மாமன்னரும் ஜேக்கி சான்னுக்கு டத்தோ விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்

அமெரிக்காவின் விலையுயர்ந்த நிலச் சொத்துகளைக் கொண்டிருக்கும் பெவர்லி ஹில்ஸ் என்ற ஆடம்பரப் பகுதியில் பல வீடுகளைக் கொண்டிருப்பதோடு, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் நிலங்களையும், கட்டடங்களையும் வாங்கிப் போட்டிருக்கிறார் ஜேக்கி சான். கால ஓட்டத்தில் இதன் மதிப்புகளும் பன்மடங்கு உயர்ந்திருக்கின்றன.

மேலும், பழங்கால மரவேலைப்பாடுகள் கொண்ட தளவாடங்களை வாங்கிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர் ஜேக்கி சான். கால ஓட்டத்தில் அவர் சேகரித்து வைத்திருக்கும் பழங்கால தளவாடங்களின் மதிப்பும் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன.

பனாமா நாட்டின் அனைத்துலக வழக்கறிஞர்கள் அலுவலகமான மொசேக் பொன்சேகா நிறுவனத்தின் ஆவணங்கள் ஒரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டபோது, சுமார் 6 அனைத்துலக (Off shore) நிதி நிறுவனங்களில் அவர் பங்குகள் வைத்திருக்கும் இரகசியம் வெளியானது.

சீனாவில் தான் வைத்திருக்கும் பழங்கால வீடுகளையும், பழங்கால தொல்பொருள் பொருட்களையும் சீனாவில் அமையப் போகும் அருங்காட்சியகத்திற்கு வழங்கப் போவதாகவும் ஜேக்கி சான் அறிவித்திருக்கிறார்.

இத்தனை கோடிகள் வைத்திருந்தாலும், அவரது மகன் ஜோய்ஸ் சான் போதைப் பொருள் பயன்பாட்டினால் சீனாவில் கைது செய்யப்பட்டார் என்பதுதான் சோகம்.