சென்னை – கட்டணம் செலுத்தி கணினி மற்றும் கையடக்கக் கருவிகளின் மூலம் திரைப்படங்கள், பொழுதுபோக்குத் தொடர்களைக் கண்டு களிக்கும் நடைமுறையை வழங்கிவரும் இரண்டு முன்னணி நிறுவனங்கள், அமேசோன் பிரைம் மற்றும் நெட்பிலிக்ஸ் ஆகும்.
இந்த இரண்டு நிறுவனங்களும் ஏராளமான அளவில் வெப் சிரீஸ் எனப்படும் திரைப்படத் தொடர்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. தொலைக்காட்சித் தொடர்கள் போன்று சுமார் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தொடர்களாக 8 அல்லது 10 தொடர்களை ஒரே நேரத்தில் பார்ப்பது போல் அடுத்தடுத்து வழங்குவதுதான் வெப் சிரீஸ் என்பதன் நடைமுறையாகும்.
அந்த வகையில் தற்போது, ‘வெள்ளை ராஜா’ என்ற தலைப்பிலான திரைப்படத் தொடரை அமேசோன் பிரைம் வழங்கியுள்ளது. பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் காயத்ரி, காளி வெங்கட், பார்வதி நாயர் போன்ற சில முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
வட சென்னையின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஒருவனின் கதைப் பின்னணியோடு, பாவா லாட்ஜ் என்ற மலிவு விலை தங்கும் விடுதியைச் சுற்றி நடப்பதாக அமைந்திருக்கும் இந்தத் தொடரை இயக்கியிருப்பவர் குகன் சென்னியப்பன்.
டிசம்பர் 7-ஆம் தேதி முதல் அமேசோன் பிரைம் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வருகிறது, ‘வெள்ளை ராஜா’ திரைப்படத் தொடர். அமேசோன் பிரைம் அலைவரிசையில் ஒளிபரப்பாகும் முதல் தமிழ்த் தொடரும் இதுவேதான்.
வெள்ளை ராஜாவின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: