Home நாடு அனைத்துலக மாணவர் முழக்க வெற்றிச் செல்வங்களுக்குப் பேராக்கின் கௌரவிப்பு

அனைத்துலக மாணவர் முழக்க வெற்றிச் செல்வங்களுக்குப் பேராக்கின் கௌரவிப்பு

1943
0
SHARE
Ad

ஈப்போ – பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல சாதனைகள் படைக்கின்றனர். குறிப்பாக அனைத்துலக மாணவர்களோடு போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளனர். இது மிகவும் சிறப்பான வளர்ச்சியாகும்.

“டிசம்பர் 1ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதல் பரிசையும் 2-ஆம் பரிசையும் ஒருசேர வென்று மலேசியாவுக்கு இரட்டை வெற்றியை வாங்கிக் கொடுத்த இரண்டு மாணவரையும் பாராட்ட வேண்டும். இவர்கள் இரண்டு பேரும் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்” என்று ஈப்போவிலுள்ள பேராக் மாநிலச் செயலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடந்த பாராட்டு விழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் கூறினார்.

பேராக்கைச் சேர்ந்த இந்த இரண்டு சாதனை மாணவர்களும் வரலாறு படைத்து மலேசியாவுக்கே பெருமை சேர்த்துவிட்டனர். அவர்களுக்கும் பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள், மாணவரோடு சிங்கப்பூர் வரை சென்று ஆதரவு கொடுத்த தலைமையாசிரியர் திருமதி.மாரியம்மாள், குமாரி.பொன்னி மற்றும் மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் அனைவருக்கும் சிவநேசன் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முதல் பரிசை வென்ற கமல்ராஜ் குணாளன் மற்றும் இரண்டாம் பரிசுக்குரிய கிவேசா சுந்தர் இருவருக்கும் வெற்றிக் கேடயமும் ரொக்கத் தொகை 300 ரிங்கிட்டையும் பேராக் மாநில அரசாங்கம் சார்பில் சிவநேசன் வழங்கினார். மேலும் இவர்களின் பள்ளியான கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும், மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கும் தலா மூவாயிரம் ரிங்கிட் வெகுமதியாக வழங்கப்பட்டது.

முன்னதாக உரையாற்றிய பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன், அனைத்துலக மாணவர் முழக்கத்தில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு சிற்றரசு, ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்படி பல அயல்நாடுகளில் மாணவர்கள் தமிழைப் படிக்கிறார்கள். நம் நாட்டிலும் தமிழ்ப்பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக மிளிர்கின்றனர். எனவே பெற்றோர்கள் நம்பிக்கையோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்  கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார், தமிழ்மொழி உதவி இயக்குனர் சந்திர சேகரன், தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். இதே நிகழ்ச்சியில் 20 தமிழ்ப்பள்ளிகளுக்குப் பராமரிப்பு உதவி நிதியும் கணினி, அச்சுக் கருவிகளும் வழங்கப்பட்டன. உயர்க்கல்வி மாணவர்கள் சிலருக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.