Home Photo News “ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்

“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்

1219
0
SHARE
Ad

சென்னை – அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள்ளாக இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் “ராகுலை அடுத்த பிரதமராக்குவோம்” என முதல் முறையாக பகிரங்கமாக அறைகூவல் விடுத்துள்ளார்.

ஸ்டாலினின் இந்த அறைகூவல் காங்கிரஸ் வட்டாரங்களில் உற்சாகம் கரைபுரள வைத்திருக்கும் அதே வேளையில் ராகுலை அடுத்த பிரதமராக அறிவித்தால் அதன் காரணமாக மக்களிடையே எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஆதரவு குறையக் கூடும் என்ற சர்ச்சையும் எழுந்திருக்கிறது.

“1980ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள், அன்னை இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக வேண்டும் என குரல் கொடுத்தபோது, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்றார். 2004ம் ஆண்டு சென்னைத் தீவுத் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை சோனியாகாந்தி அவர்களை குறிப்பிடும் போது, இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க! என்று முழக்கமிட்டார். 2018 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், நான் அழைக்கிறேன். நாம் டெல்லியில் புதிய பிரதமரை அமர வைப்போம். புதிய இந்தியாவை உருவாக்குவோம். தலைவர் கலைஞரின் மகனாக தமிழகத்தில் இருந்து ராகுல் காந்தி அவர்களின் பெயரை பிரதமர் வேட்பாளராக நான் முன்மொழிகிறேன்” என உரையாற்றிய ஸ்டாலின் தனது அந்த வாசகங்களை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் நாட்டிலும் அகில இந்திய அளவிலும் ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கட்டமைக்கப்படும் பிரம்மாண்டக் கூட்டணிக்கான முன்னோடியாக நேற்றைய கருணாநிதி சிலை திறப்பு விழா பார்க்கப்படுகிறது.

அந்த விழாவின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:

படங்கள்: நன்றி – மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கம்