கோலாலம்பூர்: உலகின் மிகப்பெரிய தொழில் நிபுணர்களின் தொடர்பு அமைப்பான லிங்க்ட்இன் (Linkedln), 2019-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவில், தங்களது முதல் அலுவலகத்தை அமைக்கவுள்ளது. இந்நாட்டில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தனது பயனர்களுக்கு சேவையாற்றுவதற்கும், ஆசியா பசிபிக் வட்டாரத்தில் அவர்களது வியாபாரத்தை உயர்த்துவதற்கும் இந்த செயல்முறை உதவும் எனக் கூறப்படுகிறது.
ஆசியான் பசிபிக் வட்டார நிருவாக இயக்குனர் ஒலிவீர் லெக்ராண்ட், தென்கிழக்காசியாவின் பரந்த மக்கள் தொகையான, 600 மில்லியன் மக்கள் தங்களது தொழில் சார்ந்த பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு லிங்க்ட்இன் உதவும் என்றார்.
தென்கிழக்காசியாவில், தற்போது 28 மில்லியன் பேர்கள் லிங்க்ட்இன்னில் உறுப்பினர்களாக இருப்பதாக அவர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
“மலேசியாவில் சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தொழிலை வலுப்படுத்த தொடர்ந்து உதவி வருவதால், இந்த நடைமுறையை மேலும் வளர்ச்சியடைந்த நிலைக்கு இட்டுச் செல்வதே எங்கள் நோக்கம் “என்று அவர் கூறினார்.