மணிப்பூர்: மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கேம் கடந்த மாதம், பா.ஜ.க தலைமையிலான மணிப்பூர் அரசாங்கத்தின் மீது தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், அவருக்கு 12 மாதக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக இது கருதப்படுகிறது.
டிசம்பர் 11-ம் தேதி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் ஆலோசனைக் குழு அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்து, டிசம்பர் 13-ம் தேதி, கிஷோர் 12 மாதங்களுக்கு சிறையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்ததாக தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.
பா.ஜ.க தலைமையிலான மாநில அரசாங்கத்தை விமர்சித்து காணொளி ஒன்றினை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதற்காக, கடந்த நவம்பர் 27-ம் தேதி, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பராமரிக்கும் எந்தவொரு விவகாரத்திலும் சட்டத்தை மீறி அவர் செயல்படாமலிருப்பதற்காக கைது செய்யப்பட்டார் என அரசாங்கத் தரப்புக் கூறியது. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததன் பேரிலும், முடிந்தால் தம்மை கைது செய்யுமாறு மாநில அரசுக்கு சவால் விடுத்ததாலும் அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் பிணையில் (ஜாமினில்) வெளியேறினார். ஆயினும், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது மணிப்பூரிலுள்ள புறநகர்ப்பகுதியில் உள்ள மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.