கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்திற்குப் பிறகு, அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அதன் நோக்கத்தை தம்மால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கூறினார்.
கோயில் கலவரத்திற்கும், வேதமூர்த்திக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத பட்சத்தில் அவரை ஏன் பதவியிலிருந்து விலகுமாறு அறிக்கைகளும், அது தொடர்பான கூட்டங்களும் நடத்தப்படுகின்றன என அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மகாதீர் முகமட்டின் சிறப்புப் பத்திரிக்கைச் செயலாளர் எ கடிர் ஜாசின், அமைச்சர் வேதமூர்த்தி மக்களவையில் இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டார் எனக் கூறியதற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அம்னோ, பாஸ், பெர்சாத்து மற்றும் பிகேஆர் கட்சியிலிருந்து அவரை எதிர்க்கும் கூட்டத்தோடு இவரும் இணைந்து கொண்டு, “குழந்தைத்தனமாக” வேதமூர்த்தியை பதவியிலிருந்து விலகச் சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றார்.
வேதமூர்த்திக்கு எதிராக பெர்சாத்து இளைஞர் பகுதி பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுத்தபோது, சக அமைச்சராக இருந்த போதிலும் அவர்களுடன் இணைந்து கொண்ட இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்கின் போக்கு குறித்தும் இராமசாமி சாடினார்.
பிரதமர் ஏற்கனவே வேதமூர்த்தியின் செயல்திறன் குறித்து மகிழ்ச்சியடைந்ததாக கூறியதை நினைவூட்டிய இராமசாமி, “ஏன், எல்லாரும் வேதமூர்த்தியை தாக்குகிறார்கள்? ஒரு வேளை அவர் ஹிண்ட்ராப்பின் தலைவர் என்பதனாலா? அல்லது, அவர் நியமிக்கப்பட்டவர், ஆகவே சுலபமாக நீக்கப்படலாம் எனும் எண்ணத்தினாலா, அல்லது, அவர் சிறுபான்மையினர் சமூகத்திலிருந்து வந்ததனாலா”, என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் குறித்து காடிர் உடன் பேசுவதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் இராமசாமி கூறினார்.